TamilSaaga

விஜய், அஜித் எனும் மாஸ் குதிரைகளுக்கு “அப்பன்” நான் – பலர் கைத்தட்டி சிரித்த சாம்ராஜ்யத்தை “விக்ரம்” மூலம் தட்டித் தூக்கியுள்ள கமல்ஹாசன்!

தமிழ் சினிமா எனும் Universal-ல் தனி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும். எம்.ஜி,.ஆர், சிவாஜி கணேசன் எனும் இரு பெரும் துருவங்கள் ஓயத் தொடங்கிய காலத்தில் வீசத் தொடங்கிய இந்த இரு புயல்களும், 90-களில் சூறாவளியாக உருவெடுத்தன.

இதில் ஒரு கமல்ஹாசன் எனும் சூறாவளி ‘மாஸ், மசாலா எனும் பெட்டிக்குள் அடைந்து கிடக்க விருப்பமின்றி தன் மனம் போன போக்கில் சுழற்றிக் கொண்டு சென்றது. அதில் சில வெற்றிகளும், பல தோல்விகளும் கிடைத்தன. ஆனால், ரஜினி எனும் ‘புத்திசாலி’ சூறாவளி தன்னிடம் இருந்து ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்ற பல்ஸை நன்கு அறிந்து கொண்டு மாஸ், கமெர்ஷியல் எனும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வீசத் தொடங்கியது. அதில் வெகு சில தோல்விகளும், பல பல ‘நம்பமுடியாத’ வெற்றிகளும் கிடைத்தன.

அதென்ன நம்பமுடியாத வெற்றி?? எம்.ஜி.ஆர் எனும் மசாலா நாயகனின் மாஸ் எந்தளவுக்கு வலிமையானது என்பது அவரது ரசிகர்களிடம் கேட்பதை விட, சக போட்டியாளர் சிவாஜி கணேசனின் ரசிகர்களிடம் கேட்டால் புட்டு புட்டு வைப்பார்கள். தமிழகத்தின் கடைக்கோடி மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் அந்த ‘பொன்மனச் செம்மல்’ எம்.ஜி.ஆர். சினிமாவில் அவரைவிட ஒரு மக்கள் கவர் நடிகர் இருக்க முடியுமா? என்றே கருதப்பட்டது. மக்கள் மனதில் இடம்பிடிப்பதில் அவரை மிஞ்ச இனி ஒருவன் பிறக்க வாய்ப்பில்லை என்றனர்.

ஆனால், அந்த அத்தனை கருத்துக்களையும், சவால்களையும் முறியடித்து கருப்புத் தங்கமாய் மக்கள் மனதில் அசுர பலத்தோடு இடம் பிடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இடம்-னா சும்மா கொஞ்ச நஞ்சமல்ல.. அசைக்க முடியாத சிம்மாசனம். சினிமாவில் இதுக்கு மேல் ஒருவர் உச்சத்துக்கு செல்ல முடியுமா? என்று சந்தேகிக்கும் அளவுக்கான இடத்தைப் பிடித்தார்.

அதற்கு காரணம் அவரது மாஸ், மசாலா, ஸ்டைல் படங்கள். அவ்வளவே. ஆனால், கமல்ஹாசன் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கினார். மசாலா, காமெடி, பிரம்மாண்டம், சீரியஸ் என்று சினிமாவின் அனைத்து முகங்களிலும் தன்னை பொருத்திக் கொண்டார். தசாவாதாரங்களையும் எடுத்தார்… பஞ்ச தந்திரமாக ‘மேகி’யோடு கும்மாளமிடும் சினிமாவிலும் நடித்தார். சினிமாவின் எந்த முயற்சியை ஒருவர் எடுத்தாலும், அதன் பிள்ளையார் சுழியாக தான் இருக்க வேண்டும்.. அதன் Dictionary-யாக தான் இருக்க வேண்டும்.. அதன் Reference-ஆக தான் இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார் கமல்ஹாசன்.

இதனால் கமல்ஹாசன் சந்தித்த வெற்றிகளை விட அடைந்த தோல்விகள் அதிகம். அதுமட்டுமின்றி இதனால் தான் ரஜினி அடைந்த உச்சத்தை அவரால் நெருங்கக் கூட முடியவில்லை. இதனால் தான் 90-கள் முடிந்து 21ம் நூற்றாண்டு தொடங்கிய போது ரஜினி தனக்கு போட்டியாக யாருமே இல்லாமல் களத்தில் நின்றார். கமல் எனும் குதிரை அப்போது இருந்ததே தவிர, அது வெற்றிக்குதிரையாக வலம் வரவில்லை. நாம் முன்பே சொன்னது போல், சில வெற்றிகள், பல பல தோல்விகள். இதுவே கமல்ஹாசனின் முகமாக இருந்தது.

இந்த காலக்கட்டத்தில் தான் அஜித், விஜய் எனும் இரு இளம் துருவங்கள் தமிழ் சினிமாவை அக்கிரமிக்கத் தொடங்கின. குறிப்பாக விஜய் எனும் குதிரையின் பட வசூல்களை கண்டு ரஜினியே வியந்து போனார். ‘கில்லி’ படத்திற்கு வரவேற்பு ரஜினியின் ‘படையப்பா’ படத்துக்கு இணையான வரவேற்பு என்று சொன்னால் அது மிகையாகாது. மறுபக்கம் அஜித் தனது சாம்ராஜ்யத்தை நிறுவிக் கொண்டிருந்தார். வெறித்தனமான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். 2010 வரை ரஜினி எப்படியோ அடித்துப் பிடித்து தனது மார்க்கெட்டை சற்றும் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதே நம்பர்.1 எனும் உச்சத்தில் இருந்தார்.

ஆனால், அதன் பிறகு இயற்கையாக அவரது வயது மூப்படைய தளர்வடைந்தார். உடல்நிலையும் பாதிக்கப்பட இன்னமும் சற்று சறுக்கினார். ரஜினி என்றாலே படம் சக்ஸஸ் என்ற நிலை மாறி, 2010க்கு பிறகு 2.0, பேட்ட எனும் இரண்டு வெற்றிப்படங்களை மட்டுமே அவரால் கொடுக்க முடிந்தது. இடையில் வெளியான கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா, தர்பார், அண்ணாத்த ஆகிய அனைத்தும் தோல்விப்படங்கள் தான். 2.0 பிரம்மாண்டமாக இருந்ததே தவிர… அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதாவது அது ஷங்கர் படமாக மட்டுமே இருந்தது. ‘பேட்ட’ படத்தில் மட்டுமே அவரது ரசிகர்கள் இளைப்பாறினார்கள். அப்படியெனில், கடந்த 12 ஆண்டுகளில் ரஜினி தன் ரசிகர்களை திருப்திப்படுத்தியது ஒரேயொரு படத்தில் தான். உச்சம் தொட்ட ரஜினிக்கே இந்த நிலைமை என்றால்? கமல்ஹாசனுக்கு??

கடந்த 20 வருடங்களில் கமல் நடித்த படங்களில் அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது ‘வேட்டையாடு விளையாடு’ மற்றும் ‘விஸ்வரூபம் பார்ட் 1’ மட்டும் தான். பஞ்ச தந்திரம் படம் ரசிகர்கள் தாண்டி வெகுஜன மக்களுக்கும் பிடித்திருந்தாலும், அப்படத்தால் அவரது பிஸ்னஸ் ஒருபடி கூட முன்னேறவில்லை. அது கமல்ஹாசனின் சூப்பரான காமெடி படம். அவ்வளவு தான்.

இதற்கிடையே விஜய், அஜித் எனும் இரு மலைகள் மிக பிரம்மாண்டமாக வளர, அது ரஜினி எனும் சூரியனே மறைத்துக் கொண்டிருந்தது. ஒருக்கட்டத்தில் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சியைத் தொடங்க, பிக்பாஸ் எனும் டிவி ஷோவை தொகுத்து வழங்க, அவரது சினிமா வாழ்க்கை அத்தோடு முடிந்துவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர். அப்படி நினைத்ததில் அத்தனை லாஜிக் இருந்தது. ஏன்.. அவரே அப்படித்தான் நினைத்திருப்பார். 2015ம் ஆண்டு அஜித்தின் ‘வேதாளம்’ படம் ரிலீஸான போது கூடவே ரிலீசான படம் தான் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’. பலருக்கு கமல் இப்படியொரு படத்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியக் கூட இல்லாத அளவுக்கு அஜித்தின் மாஸ் முன்பு காணாமல் தூங்கியது இந்த தூங்காவனம்.

நினைத்துப்பாருங்கள்.. எல்லோரும் கமல் அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டிருக்க இன்று ‘விக்ரம்’ என்ற படத்தின் மூலம், 1980 ப்ளஸ்-களில் தனது படத்துக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் படை திரண்டு வந்ததோ இன்று அதைவிட ஒருபடி மேல் ரசிகர்கள் கூட்டத்தில் திரட்டியிருக்கிறார் கமல்ஹாசன். 67 வயது என்கிறார்கள். படத்தில் எந்தவொரு காட்சியிலும் அவர் ஒரு வயதான நபர் என்பதை பார்க்கும் ஆடியன்ஸ் உணர முடியாது. அஜித்தோ, விஜய்யோ நடித்திருந்தால் எந்தளவுக்கு ஒரு எனர்ஜி இருந்திருக்குமோ, அதைவிட அதிகமாக எனர்ஜி, மாஸ் காட்டி எத்தனை நடிகர்கள் வந்தாலும், அவர்களுக்கு எவ்வளவு மாஸ் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் ‘அப்பன்’ நான் என்று விக்ரமாக சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.

தனது பிடிவாத குணத்தை தளர்த்தி, ஒரு இயக்குனரின் நடிகனாக, ‘ஆக்ஷன், கட்’ எனும் வார்த்தைகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு 67 வயதில் நடித்த ஒரு படத்துக்கே இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கிறது என்றால், 20 வருடங்களுக்கு முன்பும் அவர் இதையே செய்திருந்தால்….? கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts