சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் தான். அதுவும் தென்னிந்தியாவில் இருந்து சென்றவர்கள் தான். இது தவிர இலங்கை தமிழர்களும் சிங்கப்பூரில் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் உள்ள நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. இங்குள்ள பெரும்பாலான பள்ளிகளில் இரண்டாம் மொழி பாடமாக தமிழ் தான் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குடும்பங்களில் 3.1 பேர் வீடுகளில் தமிழில் தான் பேசுவதாக சொல்லப்படுகிறது.
19ம் நூற்றாண்டில் தான் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக, வியாபாரிகளாக தமிழர்கள் சிங்கப்பூருக்கு அதிகம் வர துவங்கினார்கள். இங்குள்ளவர்களில் அதிகமானவர்கள் தமிழ் பேசும் இந்துக்கள் தான். அதற்கு அடுத்த படியாக தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். தமிழ் இலக்கியம், கலாச்சாரமும், பொங்கல், தீபாவளி பண்டிகைகளும் தமிழகத்தை போன்றே சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதே போல் இந்து கோவில்கள் அதிக இருப்பதால் இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், குல தெய்வத்திற்கு படையல் இடுவது, கோவில் திருவிழாக்கள், தீமிதி விழாக்கள் போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதே போல் தமிழகத்தில் நடப்பதை போன்ற உறவுகளை அழைத்து காதுகுத்து, திருமணம் போன்ற விசேஷங்களையும் நடத்துகிறார்கள். இதனால் சிங்கப்பூரை பொருத்தவரை சொந்த நாட்டை விட்டு விலகி இருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படாது. கோவில்கள் விழாக்கள், தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களில் மலாய் உள்ளிட்ட மற்ற மொழி பேசும் மக்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, தமிழர்களின் கலாச்சார வழக்கப்படி கொண்டாடுவது தான் ஆச்சரியத்திற்குரிய விஷயம்.
சிங்கப்பூர் கோவில்களை பொருத்தவரை சிறிய கோவில்கள், கிராம தெய்வங்களின் கோவில்கள் என எதிலும் உயிர் பலியிடும் வழக்கம் கிடையாது. அனைத்து தெய்வங்களுக்கும் இங்கு சைவ படையல் மட்டுமே போடப்படுகிறது. மற்றபடி எல்லை தெய்வம் துவங்கி, முக்கிய தெய்வங்கள் வரை வருடத்திற்கு ஒருமுறை காப்பு கட்டி, கொடியேற்றி, திருவிழா நடத்துவது, விரதம் இருந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது என தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வு தான் அனைவரின் மனதில் வரும்.
சிங்கப்பூரில் தைப்பூசத்திற்கு விடுமுறை இல்லை . தைப்பூசத்தன்று காவடி, பால் குடம் என லட்சக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திகடன் நிறைவேற்றுவார்கள். அம்மன் கோவில் திருவிழாக்கள் என்றால் கண்டிப்பாக தீச்சட்டி ஏந்துவது, தீமிதி உற்சவங்கள் நடத்துவது நடைபெறும். அதனால் இங்கிருக்கும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தெரியாமல் போய் விடும் என்ற பயம் இருக்காது.
ஜனவரியில் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். அதே போல் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். வீடுகளில் விதவிதமாக கோலமிட்டு, பொங்கல் வைத்து புதிய ஆண்டை வரவேற்பார்கள். இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரும் கூட தங்களின் மத வழிமுறைகளின் படி கலாச்சார நிகழ்வுகளை நடத்துவது, மதக் கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றையும் நடத்துகிறார்கள்.