சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (25) என்ற இளைஞர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
அவர் அக்கட்சி தொடர்பான பணிகளில் ஈடுபட்டதனால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதாக சிங்கப்பூர் போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இனி ஆயுள் முழுக்க அவர் சிங்கப்பூர் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உதவியாளர் செந்திலிடம் Tamil Saaga சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், “இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. முதலில் சிங்கப்பூரில் நாம் தமிழர் அமைப்பே கிடையாது. அப்படியிருக்கும் போது, எப்படி ஒருவர் அங்கே கட்சிப் பணிகளில் ஈடுபட்டார் என்று கூறுகிறார்கள் என புரியவில்லை. எங்களுக்கே இன்னமும் இதுகுறித்த முழுமையான தகவல் கிடைக்கவில்லை. குமார் என்று சொல்லப்படும் அந்த இளைஞரின் புகைப்படமோ, அவரைப் பற்றிய வேறு எந்த தகவலோ கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறோம்” என்று கூறியுள்ளார்.
எனினும், குமாருக்கும் அவர் பணிபுரிந்த நிறுவனத்துக்கும் இடையே நடந்த மோதலில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. சீமான் உதவியாளர் செந்தில், உண்மை தகவலை உறுதிப்படுத்தினால், நிச்சயம் தமிழ் சாகா சார்பில் வெளியிட தயாராக இருக்கிறோம்.