அறிந்த சிங்கப்பூரும் அறியாத அதன் சில ஆச்சரியங்களும்.
பிரியா – 1978 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ரஜினிகாந்த் ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில், பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதி, இளையராஜா அவர்கள் இசை அமைத்த கே.ஜே யேசுதாஸ் அவர்கள் பாடிய சிங்கப்பூரை பற்றிய ஒரு திரைப்படப் பாடல் உண்டு!
அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே! புதுமையிலே மயங்குகிறேன்! பார்க்க பார்க்க ஆனந்தம்! பறவை போல உல்லாசம்!
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்!
வெறும் பேச்சு, வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில் !
கள்ளம் , கபடம், வஞ்சகம் இன்றி கண்ணியமாக, ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்!
சீனர், தமிழர், மலாய மக்கள் உறவினர் போல அன்புடன், நட்புடன் வாழும் சிங்கப்பூர்!
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்,
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்….!
அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் இதே சிறப்புகளுடன் இன்னும் அதிகமான ஆர்வமூட்டக்கூடிய, ஆச்சரியமூட்டக்கூடிய ஒரு நாடாகவே சிங்கப்பூர், பல தமிழர்களின், இந்தியர்களின், ஆசிரியர்களின், உலக மக்களின், கனவு தேசமாக திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!.
தென்கிழக்கு ஆசியாவின் ஒரு தீவு நாடு என்பது தொடங்கி, கிபி இரண்டாம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாடு, 1879 தொடங்கி பிரிட்டனின் காலனி நாடாக இருந்து, இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஆதிக்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து, 1963இல் மலேசியாவோடு இணைக்கப்பட்டு, பின் 1965 ஆகஸ்டு 9 இல் விடுதலை பெற்றது;தனி குடியரசு நாடானது;1959ஆம் ஆண்டு முதல் ‘மக்கள் செயல் கட்சி’ எனும் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியின்கீழ் உள்ளது;சீனர்கள், மலாயர்கள்,தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் போல வாழும் சிறப்புமிக்கது; மிகச்சிறிய பரப்பளவு கொண்ட நாடு என்றாலும் தனது உள் கட்டுமானத்தை மிகத் தரமாக அமைத்துக் கொண்டு, தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ள நாடு என்பதெல்லாம் ஓரளவுக்கு நம் எல்லாருக்கும் தெரிந்ததே! இன்றைய சிங்கப்பூரின் சிறப்புகள் பற்றியும் பலரும் பலவிதமானவைகளை பேசிக்கொண்டும் பகிர்ந்து கொண்டும் தான் இருக்கிறார்கள்.
பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்த, ‘ நான்கு ஆசியப் புலிகள்’, அல்லது ‘நான்கு ஆசிய டிராகன்கள்’
( FOUR ASIAN TIGERS, FOUR ASIAN DRAGONS ) என்று சொல்லப்படக்கூடிய, ஹாங்காங், தாய்வான், தென்கொரியா, சிங்கப்பூர், நான்கு நாடுகளில் ஒரு நாடு! என்னும் தனிச் சிறப்பையும் கொண்ட சிங்கப்பூரின்- தெரியாத, அடடே! அப்படியா!? என புருவம் தூக்கிப் பார்க்க வைக்கும் சில செய்திகளை தெரிந்து கொள்வோமா இந்தப் பக்கத்தில்!?!
சிங்கப்பூர் – ஒன்றல்ல 64 தீவுகளின் நாடு !
நம்மில் பலருக்கும் தெரியாது, சிங்கப்பூர் வெறுமனே ஒரு தீவு நாடு அல்ல! அது ஒரு நிலப்பரப்பின் மையத்தைச் சுற்றி 64 கடல் தீவுகள் கொண்ட ஒரு நாடு! அவைகளில் மிகப் பெரியது சென்டோசா! புலாவ் உபின், செயின்ட் ஜான்ஸ் தீவு, சகோதரிகளின் தீவுகள், போன்றவை இதில் முக்கியமானவை. சூரியனோடு விளையாடி கழிக்க விரும்பும் வெளிநாட்டவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் இயற்கையின் அற்புத பரிசுகள் தான் இந்தத் தீவுகள்!
சிங்கப்பூர் – உலகின் முதல் இரவு நேர உயிரியல் பூங்காவின் தாய் வீடு !
‘NIGHT SAFARI’ 1980 களிலேயே பரிந்துரைக்கப்பட்டு, ஏறக்குறைய 63 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவில் கட்டப்பட்ட, 1994 மே 26 முதல் செயல்பட்டு வரக்கூடிய சிங்கப்பூரின் இரவுநேர உயிரியல் பூங்காவாகும். செலிட்டர் நீர்த்தேக்கத்தை ஒட்டிய 35 ஹெக்டேர் பரப்பளவுள்ள,இரண்டாம்நிலை மழைக்காடுகளில், 1000 க்கும் மேற்பட்ட விலங்குகளை, (அவற்றில் 100க்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளவை) பராமரித்து, வனவிலங்கு காப்பகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த இரவு நேர உயிரியல் பூங்கா இதுவரை கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கும் சிங்கப்பூரின் ஒரு சிறப்பான இடமாகும்.
சிங்கப்பூர் – செயற்கை நீர்வீழ்ச்சிகளின் நகரம்!
தண்ணீர் மேலாண்மையிலும், குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதிலும், தண்ணீர் மறுசுழற்சி முறைகளிலும், உலகத்தையே வியந்து பார்க்க வைத்த சிங்கப்பூர் பல்வேறு செயற்கையான நீர்வீழ்ச்சிகளையும் கொண்டிருக்கும் ஒரு நாடு.
1971 ல் ஜூராங் பறவைகள் பூங்காவில், சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் ஆலோசனைப்படி 30 மீட்டர் உயரத்திலிருந்து விழக்கூடிய, செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி தான் தொடக்கம்…
அது தொடங்கி 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழக்கூடிய, பசுமையான தோட்டங்கள் சூழ உருவாக்கப்பட்ட ஜூவல் சாங்கி விமான நிலையத்தின், உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சி வரை சிங்கப்பூரில் நீங்கள் பார்ப்பதற்காகவே, உங்கள் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய, உங்களை புல்லரிக்கச் செய்யும் பல்வேறு செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் – இரவுப் பந்தயங்களின் முன்னோடி நகரம்!
F1 – FORMULA 1 SINGAPORE GRAND PRIX
2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும், எல்லா வயதினருக்கும் பார்வையாளர்களுக்குமான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருக்கும், ஒரு கார் பந்தயம்.
இதுதான் உலகத்தின் முதல் பார்முலா ஒன் இரவு பந்தயமாக கார் பந்தயங்களின் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
‘ மெரினா பே ‘ என்னும் இந்த பந்தயம் நடைபெறக்கூடிய வீதிகள் பல ஆண்டுகளாக இந்த பந்தயங்களுக்காகவே மாறாமல் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் சிறப்பு!
இந்த பாதையில் அமைக்கப்பட்டு இருக்கிற ஒளிரும் பல்வேறுவிதமான விளக்குகள் சிங்கப்பூரின் இரவு நேரங்களை இன்னும் கொஞ்சம் அழகாக்கி விடுகின்றன என்பது தனிச்சிறப்பு!
வழக்கமான ஃபார்முலா 1 கார் பந்தயங்களில் சுற்றுகளை விட இந்த மெரினா பீச் பகுதி அதிக வளைவுகளைக் கொண்டுள்ளது. (மொத்தம் 23) என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் – ஒரு கொண்டாட்டங்களின் நகரம் !
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் இணக்கமாக வாழும் நாடு என்பதாலோ என்னவோ! சிங்கப்பூரில் எப்போதும் கொண்டாடிக் கொண்டே இருக்க ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது! இதுதான் அந்த நகரை இன்னும் உயிர்ப்போடும், அழகாகவும் காட்டுகிறது.
கலாச்சார விழாக்கள், முக்கியமான விளையாட்டு நிகழ்வுகள், மாறுபட்ட பொதுவான கொண்டாட்டங்கள்! என சிங்கப்பூரில் விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமே இல்லை. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் தைப்பூச திருவிழா தொடங்கி, சிங்கப்பூரின் உணவு திருவிழா வரை, F1 இரவு நேர கார்பந்தயம் தொடங்கி HSBG யின் உலக ரக்பி போட்டி வரை ஆண்டின் எல்லா மாதங்களும் சிங்கப்பூர் கொண்டாட்டங்களின் நாடாகவே திகழ்கிறது.
சிங்கப்பூர் – ஒரு புலியின் பின்னணியில் உருவான சிங்கத்தின் பெயர் கொண்ட நாடாகவும் இருக்கலாம்.!
‘மெர்லியன்’ – சிங்கப்பூரின் அடையாளச் சின்னம்! இது ஒரு புராதாண உயிரினமாக கருதப்படுகிறது. சிங்கத்தின் தலையும். மீனின் வாலும் கொண்ட இந்த மெர்லியன் சின்னத்தை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். இதற்கு பின்னால் இருக்கிற வரலாறு சுவையானது!
14ஆம் நூற்றாண்டில், மலாய் சுமத்ரா இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கியதாகவும்,
( வேட்டையாடச் சென்றபோது என்று ஒரு வரலாறும் உண்டு) அப்போது அவர் சிங்கம் போல ஒரு மிருகத்தைப் பார்த்து, அதை சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு, அதன் விளைவாக அந்த தீவை
‘ சிங்கப்பூரா’ என்று அழைத்ததாக ஒரு வரலாற்றுக் கதை உண்டு. இந்த சிங்கப்பூரா தான் இன்றைய ‘சிங்கப்பூர்’ என்று உருமாறி இருக்கிறது.
ஏன் அந்த மிருகத்தை சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டார் என குறிப்பிடுகிறோம் என்றால் 1930கள் வரை சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட சிங்கங்கள் பற்றிய பதிவுகள் எதுவுமே இல்லை ! 1930கள் வரை சிங்கப்பூர் காடுகளில் புலிகள் தான் அதிகம் காணப்படுகின்றன என்பதால் அவர் பார்த்தது புலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
அப்படியானால் சிங்கத்தின் பெயர் கொண்ட சிங்கப்பூருக்கு அதன் பெயர் ஒரு புலியால் வந்ததா ?! ஆச்சரியமாக இருக்கிறதுதானே!! இதுபோல இன்னும் பல ஆச்சரியங்களையும், அதிசயத்தக்க அதேசமயம் பொருள் பொதிந்த, அறிவியல் கலந்த, மனித உழைப்பினால் உயர்வடைந்து, ஒரு முறையாவது பார்த்து விடவேண்டிய பல சிறப்புகளும், பல பகுதிகளும் சிங்கப்பூரில் இருக்கின்றன.
என்னங்க எப்போ கிளம்பலாம் சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு?!?