TamilSaaga

நாம் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்புவது ஏன்? – ஆரா அருணாவின் பக்கங்கள்

‘குடும்பத்தில் வருமானம் போதவில்லை’,

‘வீட்டில் ஒன்று, இரண்டு, திருமண செலவுகள் இருக்கிறது’,

‘வாங்கிய கடனை அடைக்க வேண்டும்’,

‘இந்தப் படிப்புக்கு இங்கு இவ்வளவு சம்பளம் தான் கிடைக்கும்!’,

‘இந்த வருமானத்தில் என்றைக்கு நான் குடும்ப செலவுகள், தேவைகளை எல்லாம் நிறைவேற்றுவது?’,

‘கடமைகள் இருக்கின்றன, வயது இருக்கும் பொழுதே குடும்பத்திற்காக எதையாவது சேர்த்து வைக்க வேண்டும்!’,

இதுபோன்ற குழப்பத்தை – தேடலை – சிந்தனைகளை –  சூழ்நிலைகளை – கடந்து கொண்டு இருக்கிற ஒவ்வொரு இந்திய , தமிழக இளைஞரும் ‘ஒரு இரண்டு ஆண்டுகள் சிங்கப்பூர் போய்விட்டு வந்தால் ஓரளவிற்கு எல்லாவற்றையும் சரி செய்து விடலாமே ‘ என்கிற அறிவுரையை பெற்றவர்களிடமிருந்தோ, உறவினர்களிடம் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ அறிந்தவர்களிடம் இருந்தோ கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு சாதாரண ஏழை,நடுத்தர தமிழக  குடும்பத்தின் தேவைகளை எல்லாம் சரிசெய்து விடக்கூடிய, மாய, மந்திர வாய்ப்பாகவே சிங்கப்பூர் வேலைவாய்ப்பு   மாறிப் போயிருக்கிறது நமக்கு.

அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

பொதுவாகவே வேலைவாய்ப்பு தேடுகிற, பொருளாதார தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக, வாய்ப்புத் தேடும் எல்லா ஆசிய நாட்டவர்களுக்கு சிங்கப்பூர் ஒரு முக்கியமான, வாய்ப்புகளின் வாசலாகவே  விளங்கி வருவதற்கு பத்து முக்கியமான முதன்மையான காரணங்கள் இருக்கின்றன.

  1. உலகமயமாக்கப்பட்ட, திறந்த பொருளாதாரம்.
  2. வேலை எதுவானாலும் சேமிக்கும் அளவுக்கான லாபகரமான சம்பளம்.
  3. முற்போக்கான தனிநபர் வரி அமைப்பு .             22,000 S$ ஆண்டு வருமானம் வரை வரி இல்லை.320,000S$  ஆண்டு வருமானத்திற்கு மேல் தான் 20 % வரி.
  4. எளிதில் பெறக்கூடிய வேலை அனுமதி மற்றும் குடியிருப்பு அனுமதி.
  5. பல்வேறு நாட்டவரும் கலாச்சாரங்களும் இணைந்த இணக்கமான சூழல் நிலவுவதால், பனித் தளத்தை எளிதில்  தன்மயமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு.
  6. உலக வங்கியின் அறிவுறுத்தல் படி வியாபாரத்தை தொடங்குவதும்,தொடர்வதும் எளிது.
  7. மிகச் சிறந்த தொழிலாளர் வளம்.
  8. குறைவான குற்றம் மற்றும் லஞ்ச ஊழல் தொந்தரவுகள். ( சாதாரண ஒரு சிறிய வேலைக்கே அரசு அலுவலகங்களில் 500,1000 என்று கொடுத்து பழகியவர்களுக்கு இது பெரிய ஆறுதல் இல்லையா?
  9. தொடர்ந்து நடக்கும் நிலையான ஒரே கட்சி ஆட்சி.
  10. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு அமைப்புகள், உதவிகள், வழிகாட்டு நெறிமுறைகள்.

இந்த முக்கியமான முதன்மையான காரணங்கள் எல்லாரையும் ஈர்ப்பது போல் தமிழக இளைஞர்களையும் ஈர்க்கின்றன என்றாலும் இவைகளையும் தாண்டி, நமக்கே நமக்கான, தமிழக புலம்பெயர்வோருக்கான சிறப்புக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

முதலாவது சிங்கப்பூரின் பண மதிப்பும், மாத வருமானமும்…

ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 55 ₹ .மிக அடிப்படையான நமது வழக்கில் சொல்வதானால் கூலி வேலை பார்ப்பதாக இருந்தாலும், சிங்கப்பூரில் மாத வருமானம் 1060 சிங்கப்பூர் டாலர்கள் (S$) இந்திய ரூபாய்க்கு 58,300 ரூபாய்கள் .தமிழகத்தில் ஒரு கூலித் தொழிலாளி மாதம் ஏறக்குறைய 60 ஆயிரம் சம்பாதிப்பது என்பதை நினைத்துப் பார்க்க முடியுமா? இது அடிப்படை தான்…

S- Pass என்று சொல்லப்படக்கூடிய திறன்சார் வேலைகளில் அதாவது கல்வியறிவு சாராத மற்ற வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூர் அரசு நிர்ணயித்த மாத வருமானம் 2500 S$. அப்படியானால் மாத வருமானம் 1,37,500 ரூபாய்.

தமிழகத்திலோ ஒரு கூலி தொழிலாளி ஒரு நாளைக்கு பெறக்கூடிய குறைந்தபட்ச சம்பளம் 150 ரூபாய் .மாத வருமானம் 4,500 ரூபாய். அதுவும் முப்பது நாளும் வேலை இருந்தால்.

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு சாதாரண தொழிலாளி சம்பாதிக்கக்கூடிய ரூபாய் 800. மாத வருமானம் 24,000.அதுவும் கூட மாதம் முப்பது நாளும் வேலை இருந்தால் தான். போதாதென இங்கே ஒன்றுக்கு இரண்டு ,மூன்று, நான்கு பட்டங்களை வைத்துக் கொண்டும் மாதம் ஐந்தாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் வேலை செய்கிற லட்சக்கணக்கான படிப்பாளிகளும் உண்டு. ஐந்தாறு பட்டங்களோடு உள்நாட்டில் 10,000 15,000 ரூபாய்க்கு வேலை செய்வதை விட ,சிங்கப்பூரில் கூலித்தொழில் அல்லது சாதாரண திறன் சார் வேலை பார்த்தாலும் மாதம் 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாமே.

‘சரி !!! சம்பாதிக்கலாம் தான், ஆனால் அதற்கான செலவுகளும் இருக்குமே!?’, ஆம் இருக்கத்தான் செய்யும், கண்டிப்பாக..

ஆனால் அந்த செலவுகளும் கூட நாம் மிச்சப்படுத்துகிற அளவில் தான் இருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?

வருமானத்திற்கு போட்டது போல் அதற்காகவும் ஒரு கணக்கீடு போட்டுப் பார்க்கலாமே…!!

சிங்கப்பூரில் Dormitory என்று சொல்லப்படுகிற தங்கும் இடங்களில் மிகக் குறைந்தபட்சமாக 230 சிங்கப்பூர் டாலர்கள் தொடங்கி அறைகள் மாத வாடகைக்கு கிடைக்கும். (பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்களை அவர்களே ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்கள்  என்பது தனிக்கதை !!! ) .

மற்ற செலவுகள் எல்லாம் பணியாளரின் தனித் தேவை, அவரது சேமிப்பு திறன் பொருத்தது.

ஒரு பொது மதிப்பாக போட்டுப் பார்த்து, ஒரு மாதம் அறை வாடகை 300 S$, மற்ற செலவுகள் 500 S$ என்று வைத்துக்கொண்டாலும், ஒரு கடைநிலை தொழிலாளர் மாதத்திற்கு 200 S$ வரை மிச்சப்படுத்தலாம். அந்த 200 S$ நமக்கு 11,000 ரூபாய். ஒரு சாதாரண ஏழை, நடுத்தர குடும்பத்தின் செலவுகளை மேற்கொள்ள இந்தத் தொகை போதுமே !

அடுத்தடுத்த கட்டங்களில் இந்த தொகை அதிகரிக்கத் தானே செய்யும் !!!

சிங்கப்பூரில் வேலை செய்கிற ஒரு தமிழர், மிகக் குறைந்தபட்சம் மாதம் 300 S$ லிருந்து 500 S$ வரை சேமித்தாலே, இங்கு அவரது குடும்பம் தன்நிறைவோடு செலவுகளையும் சமாளித்து, சேமிக்கவும் செய்ய முடியுமென்றால், சிங்கப்பூர் வேலையை விரும்பாமல் என்ன செய்ய முடியும்?இது மட்டும் தானா என்று கேட்டால்,இல்லை இன்னும் இருக்கிறது,இன்னும் இன்னும் இருக்கிறது? ! அறிய ஆர்வம் இருந்தால் கேளுங்கள் உங்கள் ஆரா அருணாவிடம்.

Related posts