TamilSaaga

“சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி” : Airport-ல் காத்திருந்த நபருடன் மோதல் – அட இதுதான் காரணமா?

தொடர்கதையாக மாறியுள்ளது விமான நிலையங்கள் வழியாக தங்கள் கடத்தும் நிகழ்வு. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணிக்கும் அங்கு காத்திருந்த ஒருவருக்கும் விமான நிலைய வாசலில் வாக்குவாதம் நிகழ்ந்த நிலையில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை சுமார் 8 மணியளவில் வழக்கம்போல வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. மேலும் வந்த பயணிகளிடம் நடக்கும் வழக்கமான சோதனையும் முடிந்த நிலையில் பயணிகள் வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து வெளியே வந்த பயணியில் ஒருவருக்கும் ஏற்கனவே வெளியில் நின்றுகொண்டிருந்த ஒருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த கலாட்டாவை கண்ட அங்கிருந்த மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது, மதுரையை சேர்ந்த அந்த நபரிடம் சிங்கப்பூரில் உள்ள தரகர் ஒருவர் தங்கம் கொடுத்தனுப்பி அதை திருச்சியில் உள்ள அந்த நபரிடம் ஒப்படைத்தால் 10,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த வெளியில் நின்ற நபர் தங்கத்தை பெற்றுக்கொண்டு 5000 ரூபாய் மட்டுமே அளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரிடையே கடும்வாக்குவதம் நடந்துள்ளது. இது கடத்தல் சம்மந்தப்பட்ட சுங்கத்துறை பிரச்சனை என்பதால் போலீசார் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

மேலும் சுங்கத்துறை அதிகாரிகளில் சோதனையை கடந்து இந்த தங்கம் எப்படி விமான நிலையத்தை தாண்டி வெளியே வந்தது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அது குறித்து தற்போது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts