சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக பேருந்து சேவைகளில் அதிக அளவில் தொற்று எண்ணிக்கை என்பது வளர்ந்து வருகின்றது. இதற்கு அந்த பணியிடங்களில் உள்ள பணியிட நடைமுறைகள் தான் வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு தொற்று நோய் நிபுணர் தற்போது கூறியுள்ளார். இந்த நிகழ்வு பேருந்து பரிமாற்றங்களில் அதிக அளவிலான சோதனைக்கு வழிவகுக்கிறது என்று ரோஃபி கிளினிக்கிலிருந்து டாக்டர் லியோங் ஹோ கூறுகின்றார்.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 1) நிலவரப்படி சிங்கப்பூரில் 8 பேருந்து நிலையங்களில் 314 பெருந்தொற்று வழக்குகள் நடப்பில் உள்ளன. இந்நிலையில் இந்த அதிக தொற்று பரவலுக்கு அவர்களது ஓய்வு இடங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அவர்கள் உபயோகிக்கும் கழிப்பறைகளைப் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும். அங்கு தான் அவர்கள் முகக்கவசங்களை எடுத்துவிட்டு தங்களை சுத்தம்செய்துகொள்வார்கள் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.
உண்மையில் அத்தியாவசிய தொழிலாளர்களாகிய இவர்கள் நோய்வாய்ப்படும் நிலையில் பெரிய அளவில் சிகிச்சைக்கு செலவு செய்யமுடியாதவர்கள். ஆகையால் அவர்கள் துணி முகமூடிகளுக்கு பதிலாக முறையான அறுவை சிகிச்சை முகமூடிகளை அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
நமது நாட்டில் சுமார் 9,500 பேருந்து ஓட்டுநர்கள் உள்ளனர். மேலும் 99 சதவீத முன்கள பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் தடுப்பூசியின் முதல் டோசை முடித்துவிட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொற்று கிளஸ்ட்டர்கள் அதிகரித்து வரும் நிலையில் பேருந்து சேவைகளில் கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகள் தேவை என்று கூறப்படுகிறது.