TamilSaaga

“மலேசிய மொழி எதற்கு?” : ட்விட்டரில் இனவாத கருத்து – சிங்கப்பூரில் 27 வயது பெண்ணிடம் விசாரணை

நமது சிங்கப்பூரில், 27 வயது மதிக்கத்தக்க மலாய் இனத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் பெண், பல்வேறு இனக்குழுக்களிடையே ஒருவித பகைமையை ஊக்குவித்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூர் போலீசார் இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று பெற்ற புகாரில் “மலாய் சமூகத்திற்கு எதிராக ட்விட்டர் பயனர், ‘மாடில்டா லீ’ என்பவர் சில பதிவுகளை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. மேலும் விசாரணைகளின் மூலம், அதே நாளில் அந்த பெண்ணின் அடையாளத்தை போலீசார் உறுதி செய்தனர்.

சிங்கப்பூர் தண்டனைச் சட்டம் பிரிவு 228ன் பிரிவு 298 Aன் கீழ் பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவிக்கும் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன ட்வீட் செய்தார்?

அண்மையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆற்றிய தேசிய தின பேரணி உரைக்கு பதிலளிக்கும் விதமாக, அந்த பெண்ணின் நீக்கப்பட்ட ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில்..

“தேசிய தின பேரணி உரையை அளிக்க சிங்கப்பூரில், சீனம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று மூன்று மொழிகள் இருக்க, மலேசிய மொழி எதற்கு? எங்களுக்கு இங்கு அமைதிதான் தேவையே அன்றி மலேசிய தலைவலி அல்ல” என்று மிகவும் வன்மத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் அதை பதிவு செய்த ட்விட்டர் கணக்கு இன்னும் செயல்பாட்டில் உள்ளது. இதனையடுத்து இந்த பதிவினை போட்ட பெண்ணின் தந்தை என்று கூறிக்கொள்ளும் ஒருவர் வெளியிட்ட ஆன்லைன் கருத்து ஒன்றில் “அந்த பெண் 2013 முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு schizophrenia இருப்பதாகவும் கூறினார்.

Schizophrenia என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு மற்றும் தெளிவாக நடந்துகொள்ளும் திறனை பாதிக்கும் ஒரு கோளாறு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts