ஒரு பாத்திரத்தால் தாக்கப்பட்டு, வயிற்றில் உதைக்கப்பட்டு, முகத்தில் மலத்தால் தேய்க்கப்பட்டு உள்ளிட்ட பல கொடூரங்களை அனுபவித்துள்ளார் இந்தோனேசிய பணிப்பெண் ஸ்ரீ ரஹாயு. வெளிநாட்டு வீட்டு வேலைக்காக வெகு சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் வந்த இந்த பணிப்பெண்ணுக்கு இந்த கொடூரங்கள் இங்கு அரங்கேறியுள்ளது.
அந்த பெண் பணிபுரிந்து வந்த வீட்டில் இருந்த தம்பதியினர், ஓய் வெய் வோன் மற்றும் அவரது கணவர் பாங் சென் யோங் ஆகிய இருவரும் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 30) அந்த பெண்ணை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக மொத்தம் 7 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த ஓய் வெய் என்ற முதலாளி பெண்ணுக்கு 20 மாத சிறைத்தண்டனையும், பாங்கிற்கு நான்கு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு பணிப்பெண்ணான ஸ்ரீ ரஹாயு, இந்த தம்பதியினருக்காக கடந்த ஏப்ரல் 2017ல் வேலை செய்யத் தொடங்கினார் என்று நீதிமன்றம் கூறியது. அவர்களுக்கு அப்போது இரண்டு வயதில் ஒரு மகனும் ஒன்பது மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஆண்டே அவர்கள் வீட்டில் வேளைக்கு வந்த அந்த பெண்ணை தாக்க தொடங்கியுள்ளனர்.
துணை அரசு வழக்கறிஞர் கோ குய் ஷுயென் நீதிமன்றத்தில் பேசும்போது, வீட்டின் உரிமையாளரான ஓய் திருமதி ஸ்ரீ ரஹாயு அவர்களின் கன்னம் சிவக்கும் வரை இரு கன்னங்களிலும் அறைந்துள்ளார். அவள் நெற்றியை தனது முஷ்டியால் அடித்துள்ளார். மேலும் உலோக கரண்டியால் அவர் கையில் அடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் அந்த பணிப்பெண் இதுபோன்ற பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.