நமது சிங்கப்பூர் மட்டுமல்ல உலகின் உள்ள சுமார் 97 சதவிகித நாடுகளும் கொரோனா என்ற இந்த அரக்கனின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றது என்றால் அது சற்றுமிகையல்ல. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி கூடத்தில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது இந்த வைரஸ். அந்த ஒற்றை தொற்று இன்று கோடிக்கணக்கில் பரவி பல லட்சம் உயிர்களை பலிவாங்கி கொண்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்று எண்ணிய நமக்கு இது ஒரு பேரிடியே.
இந்நிலையில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நமது சிங்கப்பூரில் நமது தேசிய தின விழா, பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் மிகவும் எளிய முறையில் நடந்து முடிந்தது. அதேபோல தேசிய தின அணிவகுப்பும் 1200 பங்கேற்பாளர்களை கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது. அணிவகுப்பும் ஆகஸ்ட் 9ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்றது.
தேசிய தின பேரணி உரை குறித்து பிரதமர் வெளியிட்ட ட்ரைலர்
இதனையடுத்து இன்று ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 6.45 மணியளவில் நமது பிரதமர் லீ அவர்கள் தேசிய தின பேரணி உரையை நிகழ்த்த உள்ளார். நோய் பரவல் காரணமாக மீடியா கார்ப் செய்தி கூடத்தில் பிரதமர் தனது உரையை அளிக்கவுள்ளார். மேலும் இந்த நிகழ்வில் இன்று 2000 பேர் zoom செயலி வழியாக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்த ஒரு ட்ரைலர் காணொளியை நமது பிரதமர் லீ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே இன்று மாலை 6.45 மணியளவில் தேசிய தின பேரணி உரையை பிரதமர் நிகழ்த்தவுள்ளார்.