இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலின் சிறப்பாக சொல்லப்படுவது இந்த கோவிலின் லட்டு மற்றும் இங்கு செலுத்தப்படும் காணிக்கை தான். திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பொதுவாகவே பணம் மற்றும் தங்கங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் இதுவரை கோவிலின் சொத்து மதிப்பை வெளியிடாத தேவஸ்தானம் தற்பொழுது தங்கம், சொந்தமான இடம் மற்றும் பணம் சொத்து மதிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த கோவிலின் சொத்து மதிப்பானது பல பிரம்மாண்ட நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட கூடுதல் என்பதாகும். திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வங்கிகளில் 10.25 டன் தங்கம்,2.5 டன் தங்க நகைகள் மற்றும் 16 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 960 க்கும் மேற்பட்ட இடங்களில் மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேவஸ்தானம் கூறிய தகவலின் படி சுமார் இரண்டரை கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்துவதால் கோவிலின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் வருடத்திற்கு 668 கோடி ரூபாய் வங்கிகளின் மூலம் கோவிலுக்கு படியாக கிடைப்பதால் அதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய முடிகின்றது என தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. பொதுவாகவே திருப்பதியை பொறுத்தவரை உணவு , இடம் மற்றும் கோவில் துப்புரவு ஆகியவை பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதை கோவிலுக்கு செல்லும் அனைவரும் உணர்வது உண்டு. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோவிலின் வருமானம் ஆனது பிரபல பிராண்டுகளான நெஸ்ட்லே மற்றும் பிரபல நிறுவனமான விப்ரோ ஆகியவற்றை விட அதிகம் என்பதாகும்.