இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக கடந்த வாரம் முழுவதும் சிங்கப்பூரில் சில பகுதிகளில் லேசானது முதல் கடுமையான வரை புகைமூட்டம் காணப்பட்டது. மேலும் சில இடங்களில் காற்றின் தரம் மாசுபட்டுள்ளதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நிற்குமாறு சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தற்பொழுது சுமத்ரா தீவின் மேலும் சில இடங்களில் குறிப்பாக தென்பகுதி மற்றும் மத்திய பகுதிகளில் 124க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளதால் இந்த வார இறுதியிலும் புகைமூட்டம் காணப்படும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கூறும் பொழுது இதுவரை காற்று தர குறியீட்டானது 49க்கும் 62க்கும் இடையில் பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் காட்டு தீ குறித்து செய்தி ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை கேட்டு அறிந்து கொண்டு அதன்படி பயணங்கள் திட்டமிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.