சிங்கப்பூர் கோயில்களுக்கு, தனது முயற்சியால் சீரிய தொண்டாற்றி வந்த திரு M.M. பரமானந்தம் அவர்கள் உடல்நிலை குறைவின் காரணமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்ததாக அவரது குடும்பத்தார்கள் தெரிவித்தனர். நீண்ட நாட்களாக நீரிழிவு நோய் மற்றும் இதய பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சிங்கப்பூரின் அரசாங்கத்துறையில் பணியாற்றிய இவர் 1979 ஆம் ஆண்டு முதல் HEB என்று அழைக்கப்படும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் ஆவார். HEB பரம் என்று செல்ல பெயருடன் அழைக்கும் அளவிற்கு தனது அயராத உழைப்பின் மூலம் அறக்கட்டளைக்கு பணியாற்றியவர்.
‘வலது கை செய்வது இடது கை அறியக்கூடாது’ என்ற பழமொழிக்கேற்ப தான் செய்த உதவிகளை என்றும் வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாத எளிமை உள்ளம் கொண்டவர் என்று அவரது நண்பர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். லிட்டில் இந்தியாவின் வர்த்தக சங்கமான லிசாவின் முதல் தலைவர் என்ற பெருமை பெற்றவர். இவர் ஆற்றிய பொதுச் சேவைகளுக்காக சிங்கப்பூர் அரசு இவருக்கு அரசாங்கத்தின் பொது சேவைக்கான விருதையும், பொது சேவை நட்சத்திர பதக்கத்தையும் அளித்து கௌரவ படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறக்கட்டளைக்கு தலைவராக இருந்தாலும் பிற சமயங்களை அனுசரித்து சென்று அவர்களுடனும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். ஆலயம் சம்மந்தமான பிரச்சனைகள் வரும் பொழுது, சுமூகமான தீர்வு காண்பதற்காக அனைவரும் நாடும் முதல் மனிதர் இவராக இருந்தார். சிங்கப்பூரில் சுயேட்ச்சையாக இயங்கி வந்த மூன்று கோயில்களை ஒன்றாக இணைத்து, கோவில்களின் குழுக்கள் இடையே இருந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை கண்டுபிடித்தார். பல நாட்கள் தீர்க்கப்படாத பிரச்சனையை எளிதில் தீர்த்ததால், அச்சம்பவம் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4:30 மணி அளவில் இவரது உடல் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மண்டாய் பகுதியில் உள்ள தகன சாலையில் எரியூட்டப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இவரது உடல் உலகை விட்டு நீங்கினாலும், சிங்கப்பூரில் கோவில்கள் உள்ளவரை தமிழ் மக்களின் உள்ளங்களில் இவர் என்றும் வாழ்வார்.