சிங்கப்பூரில் வேலைப்பார்க்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு எப்போதும் ஒரு சிறிய தற்பெருமை உண்டு. தங்களது கிராமத்தில், ‘என் பையன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறான்’ என்றோ, ‘என் புருஷன் சிங்கப்பூருல இருக்காக’ என்று சொல்வதிலோ அவர்களுக்கு அவ்வளவு பெருமை, சந்தோசம்!
ஆனால், யதார்த்தம் என்னவென்று இங்கு சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். வேலைப்பளு, கடினமான வேலை என்ற காரணங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். தான் நேசிப்பவர்களை விட்டு விலகி, அவர்களை நேரில் பார்க்க முடியாமல், அவர்களை தொட்டு பேச முடியாமல், அவர்களுடன் பேசி சிரிக்க முடியாமல், அந்த மனநிறைவுடன் தூங்கச் செல்லும் இரவுகள் கிடைக்காமல் இங்கு வாழ்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.
அப்படிப்பட்ட சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்களின் கதம்பமான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது இந்த புகைப்படத் தொகுப்பு.
வேலை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதை பொறுத்துக் கொண்டு, கொஞ்சம் சறுக்கினாலும் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய பணிகளையும் அவர்கள் தினம் தினம் சமாளித்தாக வேண்டும். ஆனால், இவ்வளவு கஷ்டத்தையும் அவர்கள் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.
மனைவி கணவரிடம், ‘இன்னைக்கு வேலை எப்படி போனுச்சு?’ என்று கேட்டால், ‘அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.. வழக்கம் போல தான்’ என்று எதையும் வெளிக்காட்டாமல் இருப்பது தான் அவர்களின் குணம்.
எல்லாவற்றையும் விட கொடுமையானது கிடைத்ததை சாப்பிடுவது. தமிழ்நாட்டில் உள்ள உணவுகளைப் போல பணியிடங்களில் உணவு கிடைப்பது அரிது. அப்படியே வெளியே ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், அங்கேயும் இதே நிலைமை தான். உப்பு, உறைப்பு என்று எதுவும் அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்காது. ஆனால்.. உடம்பு செயல்பட வேண்டுமே.. சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டுமே.. அதனால், எது கிடைக்கிறதோ, அதை சாப்பிட்டுவிட்டு, ருசியை மறந்து பசிக்காக மட்டுமே சாப்பிடும் ஊழியர்களே சிங்கப்பூரில் அதிகம்.
இங்கு, அவர்களின் அதிகபட்ச மகிழ்ச்சி என்ன தெரியுமா? இதோ.. இந்த புகைப்படமே அதற்கு சாட்சி. என்றாவது ஒருநாள் நண்பர்கள் ஒன்றாக இணைந்து சேர்ந்து சமைத்து சாப்பிடுவது அல்லது வெளியே நண்பர்களுடன் செல்வது தான்.
என்ன தான் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்தாலும், பெற்ற பிள்ளையை வாரி அணைத்து கொஞ்ச முடியாமலும், கட்டிய மனைவியை செல்ஃபோன் வாயிலாக மட்டுமே கட்டித் தழுவும் வாழ்க்கை என் எதிரிக்கும் அமையக் கூடாது என்று நினைக்காத ஊழியர்களே கிடையாது. அதற்கும் இந்த புகைப்படங்களே சாட்சி.
உங்களின் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் பின்னால் இவ்வளவு வலியும், ரணமும் உள்ளது என்பது புரிந்து கொள்ளுங்கள்.