சிங்கப்பூரில் வேலைக்கு வருபவர்களில் சிலருக்கு, நல்ல கம்பெனி, நல்ல முதலாளி அமைவதுண்டு. அப்படி அமைபவர்களுக்கு வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும். சில முதலாளிகள், தங்களிடம் வேலைப்பார்க்கும் ஊழியர்களை உயர்பதவிக்கு செல்ல சிங்கப்பூரிலேயே கோர்ஸ் படிக்க ஏற்பாடு செய்த சம்பவம் எல்லாம் உள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாறாக சில ஊழியர்களுக்கு தாங்கள் வேலைக்கு சேரும் கம்பெனி சில காரணங்களால் பிடிக்காமல் போய்விடுவதுண்டு. வேலை நேரம், மேல் அதிகாரிகளின் நடத்தை, சக ஊழியர்களிடம் ஒத்துப் போகாமை, சம்பள பிரச்சனை அல்லது விடுமுறை தொடர்பான பிரச்சனை என்று இதற்கு ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்.
அதேசமயம், சில ஊழியர்கள் நல்ல சம்பளத்துக்காக வேறு நிறுவனங்களுக்கு மாற முயற்சி செய்வார்கள். அப்படி, சிங்கப்பூருக்கு நீங்கள் வேலைப்பார்க்க வந்த கம்பெனியில் இருந்து வேறு கம்பெனிக்கு மாறுவது தொடர்பாக சிங்கப்பூர் அரசின் புதிய விதிமுறைகளை விளக்குகிறது இந்த செய்தி.
சிங்கப்பூரில் Process Sectorல் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுடைய (வொர்க் பெர்மிட்), காலாவதியாக இன்னும் 40 முதல் 21 நாட்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களை சிங்கையில் உள்ள வேறு நிறுவனங்கள் வேலைக்கு பணியமர்த்த முடியும்.
இந்த புதிய விதிமுறையானது NTS, NAS மற்றும் PRC வகையின் கீழ் உள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூரில் வேலைக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
NTS
NTS என்பது Non-Traditional Sources ஆகும், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பங்களாதேஷ், மியான்மார் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்த NTS வரிசையில் வரும்.
NAS
அதுபோல், NAS என்பது North Asian Sources-ஐ குறிக்கும். ஹாங்காங் (HKSAR Passport), மக்காவு, சவுத் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இந்த NAS நாடுகள் பட்டியலில் வரும்.
PRC என்பது Peoples Republic of Chinaவை குறிக்கின்றது.
இங்கு, நாம் மேலே பட்டியலிட்டுள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து Process Sectorல் வேலை செய்பவர்கள் 40 முதல் 21 நாட்களுக்குள் காலாவதியாகும் Work Permitல் இருந்தால், அவர்களை வேறு நிறுவனத்தின் முதலாளி தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்திக் கொள்ளலாம்.
ஏன் இந்த மற்றம்?
அதாவது, சிங்கப்பூரில் ஏற்கனவே பணிபுரிந்த ஊழியர் என்றால், அவருக்கு நல்ல அனுபவம் இருக்கும். வேலைப்பளுவை கையாளும் திறமையும் இருக்கும். அதுமட்டுமின்றி, மிக முக்கியமாக, புதிய தொழிலாளர்களைக் அழைத்து வருவதற்கான செலவை இதன் மூலம் குறைக்க முடியும் என்ற காரணங்களை கருத்தில் கொண்டே சிங்கை அரசு இந்த சலுகையை கொண்டு வந்துள்ளது.
ஒருவேளை, ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ஊழியரை மாற்ற விரும்பவில்லை எனில், அவரின் Work Permit-ஐ புதுப்பித்து அவரை தக்க வைத்துக் கொள்ளலாம். இன்னும் உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில், “சுரேஷ்” எனும் ஊழியர் சிங்கப்பூரில் வேலைப்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் வேலைப்பார்க்கும் சிங்கை நிறுவனம், அவரை Retain செய்ய விரும்பினால், Renewal Notice-ஐ பெற்றவுடன், அவரின் Work Permit-ஐ முன்கூட்டியே புதுப்பித்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுவே, “சுரேஷ்” எனும் அந்த ஊழியரின் வொர்க் பெர்மிட் முடிய 40 முதல் 21 நாட்கள் இருக்கும் பட்சத்தில், சிங்கப்பூரில் உள்ள மற்றொரு கம்பெனி அவரை பணியமர்த்த விண்ணப்பித்தால், அது குறித்த தகவலை MOM குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது WP Online administrator-க்கு மெயில் மூலமாகவோ அனுப்பிவிடும். சுரேஷை மாற்றிக் கொள்ள விருப்பமா இல்லையா என்பதை WP Online-ஐ Log-In செய்து அந்த குறிப்பிட்ட நிறுவனம் தங்கள் பதிலை தெரிவிக்கலாம்.
சரி.. சுரேஷ் எனும் அந்த ஊழியரை ஒரு புதிய கம்பெனி பணியமர்த்த விரும்பினால் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இதற்கு பொதுவான பணி அனுமதி விண்ணப்ப செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.
முதலில் சுரேஷ் வேலைப்பார்த்த நிறுவனத்துக்கு ஒரு SMS அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும். 7 வேலை நாட்களுக்குள், அந்த கோரிக்கையை சுரேஷின் நிறுவனம் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். அப்படி அந்த கம்பெனி சார்பாக யாரும் Reply செய்யாவிட்டால், சமர்ப்பிக்கப்பட்ட பணி அனுமதி விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் பணி அனுமதியைப் பெற வேண்டும்.
வேலை அனுமதி வழங்குதல்
தற்போதைய அனுமதி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியாகினாலோ மட்டுமே பணி அனுமதியை வழங்குமாறு கோர முடியும்.
தற்போதைய Work Permit செல்லாது எனில், MOM சார்பில் நிறுவனத்துக்கு SMS அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும். புதிய பணி அனுமதிச் சீட்டைப் பெற நிறுவனத்துக்கு 14 நாட்கள் அவகாசம் இருக்கும். இல்லையெனில், இடமாற்ற ஒப்புதல் ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி, அதிக நாள் தங்கியிருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
அதேசமயம், புதிய Work Permit application-ஐ அந்த முதலாளில் ஏற்றுக் கொண்ட பிறகு மனம் மாறினால், அந்த குறிப்பிட்ட தொழிலாளரை சொந்த நாட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.