தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட அயலக தமிழர் நாளில் முக்கியமான அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் இருந்து பிரிந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வேலை செய்து வரும் தமிழர்களை ஒருங்கிணைக்க ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் அயலகத் தமிழர் நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இந்த வருடத்தின் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டில் வாழும் ஊழியர்களின் குடும்பத்தினை சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, உலகில் எல்லா திசைகளில் இருக்கும் தமிழர்களை இணைக்கும் பொருட்டு ஒரு கோடி செலவில் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது.
மேலும், புலம்பெயர் தமிழர் வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு கார்த்திகேய சிவசேனாதிபதி தலைவராக இருக்கிறார். வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காக மட்டும் துவங்கப்பட்ட இந்த துறையால் கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாட்டில் இறந்து போன 288 தமிழர்கள் உடல்களை மீட்டு கொண்டு வர முடிந்தது.
மேலும், ஊழியர்களின் ஊதிய நிலுவை தொகை, இழப்பீடு தொகையை தொடர்ந்து பெற்று கொடுத்து இருக்கிறது. வெளிநாட்டு தமிழர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். இங்கு கொடுக்கப்படும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடால் திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை என பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.
மேலும், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைக்கு சென்று அங்கு பணியில் இறந்து விடும் தமிழர்களின் குடும்பத்துக்கு ஓய்வுதியம் வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் பல குடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்து இருக்கிறார்.