TamilSaaga

உலகமே கேலி செய்த சிங்கப்பூர்.. “நசுக்கி எறிஞ்சிடுவோம்” என்று சொல்லப்பட்ட சின்னஞ்சிறு தீவை.. உலகின் பணக்கார நாடாக மாற்றிக்காட்டிய லீ குவான் யூ!

சிங்கப்பூரின் தந்தை லீ குவான், பிரிட்டீஷாரிடம் இருந்து விடுதலையடைந்த தன்னுடைய நாட்டை எப்படி பல துறைகளிலும் முன்னேற்றினார் என்பது தெரியுமா… அவரின் இன்ஸ்பிரேஷனல் கதையைத்தான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

பிரிட்டீஷ் ஆட்சி

பிரிட்டீஷ் ஆளுகையின் கீழ் சுமார் 144 ஆண்டுகளுக்கு மேல் இருந்த நாடு சிங்கப்பூர். பிரிட்டீஷாரிடம் இருந்து விடுதலை அடைந்தபிறகு அந்த நாடு நீண்ட நாட்கள் தனி நாடாக நிலைத்திருப்பது கடினம் என்பதே மீடியாக்கள் மற்றும் உலக நாடுகள் பலவற்றின் கணிப்பாக இருந்தது. ஆனால், அதை மாற்றியது சிங்கப்பூரின் தந்தை என்று கொண்டாடப்படும் லீ குவான் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தனி மனிதர். அவரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்கள் சிங்கப்பூரை உலகின் முக்கியமான தொழில்துறை வளமாக இன்று மாற்றியிருக்கிறது.

ஆரம்பத்தில் விடுதலையடைந்தபோது ஒருபக்கம் சீனா, மறுபக்கம் அமெரிக்கா என சிங்கப்பூருக்கு எதிரிகள் அதிகம். இவர்களிடமிருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதே முதல் வேலை என்று முடிவெடுத்த லீ குவான், முதலில் ஜப்பானிடம் இருந்து டாங்குகள், போர் விமானங்கள் போன்ற ஆயுதங்கள் வாங்கத் தொடங்கினார். தொடக்க காலங்களில் சிங்கப்பூருக்கு தனி ராணுவம், போலீஸ் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளும் கிடையாது. எல்லாவற்றுக்குமே மலேசியாவைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை. இதனால், ராணுவத்தைக் கட்டமைக்க விரும்பிய அவர், கட்டாய ராணுவ சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இதையும் படிங்க: Exclusive : இந்தியாவில் இருந்துகொண்டே சிங்கப்பூரில் தொழில் தொடங்க முடியுமா? – ஒரு சிறப்பு பார்வை

கட்டாய ராணுவ சட்டம்

இந்த சட்டத்தின்படி ராணுவத்தில் இணைபவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ராணுவத்தில் சேர தயங்கியவர்களும், இதனால் அதிக அளவில் ராணுவத்தில் சேர ஆரம்பித்தனர். இதையடுத்து ராணுவம் மெல்ல மெல்ல கட்டி எழுப்பப்பட்டது. இந்தோனேசியா போன்ற பகை நாடுகளையும் நண்பர்கள் வட்டத்துக்குக் கொண்டு வந்தார். இதனால், பகை குறைந்தது. இதையடுத்து உள்நாட்டு வளர்ச்சியில் கவனத்தைத் திருப்பினார். இந்த சட்டம் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதோடு, சிங்கப்பூருக்கென தனி ராணுவமும் ஏற்படுத்தப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி

இதையடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டவர், பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தத் திட்டமிட்டார். மக்களுக்கு வீடுகள் அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்தி ஏராளமான குடியிருப்புகளைக் கட்டினார். அதன்மூலம் மக்களுக்கு முறையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தினார். இதனால், மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது. இன்றளவும் சிங்கப்பூரில் பெரும்பான்மையான குடியிருப்புகள் அரசுக்கு சொந்தமாக இருப்பதற்கான விதை லீ குவான் போட்டது. எந்தவிதமான பிரிவினைக்கும் இடம் கொடுக்காமல் எல்லாரும் சமம் என்பதை இந்தத் திட்டங்கள் மூலம் லீ குவான் நிலைநாட்டினார்.

இதையடுத்து தூய்மைக்கு முதலிடம் கொடுத்து, எல்லா இடங்களிலும் அதைப் பேணிப்பாதுக்காக உத்தரவுகளைப் பிறப்பித்தார். குறிப்பாக எல்லா இடங்களிலும் துப்பப்படும் சுவிங்கத்தைத் தடை செய்ய உத்தரவிட்டார். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் தூய்மையைப் பேணாதவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக சுயிங்கம் தடைக்கு எதிராக அமெரிக்கா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. ஆனால், எதற்கும் கலங்காத லீ குவான் சுத்தம்தான் தனது நாட்டின் அடையாளம் என்பதை பறைசாற்றினார்.

இதையும் படிங்க: 14 ஆண்டுகள் ஓயாத உழைப்பு.. சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் ஊழியரின் சொந்த ஊருக்கே வந்த முதலாளி.. கண்ணீர் மல்க வரவேற்ற ஊழியர்.. வியந்து பார்த்த கிராம மக்கள்

கொஞ்சம் கொஞ்சமாகப் பொருளாதாரத்தில் முன்னேறிய சிங்கப்பூரில், தனி நபர் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கியது. இன்றளவும் தனிநபர் வருமானம் அதிகம் இருக்கும் உலக நாடுகள் பட்டியலில் டாப் 5 இடத்தில் நிச்சயம் சிங்கப்பூருக்கு ஒரு இடம் இருக்கும். பொருளாதாரரீதியாகவும் தூய்மையான அதேநேரம் தனிநபர் வருமானத்திலும் முன்னணியில் இருக்கும் சிங்கப்பூரில் தங்களது கம்பெனியின் கிளைகளைப் பரப்ப உலக நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இயல்பாகவே ஆர்வம் காட்டத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களும் சிங்கப்பூரில் தங்கள் கிளைகளைத் தொடங்கின. இதனால், உலகப் பொருளாதாரத்தின் முக்கியமான மையப் புள்ளியாகவும் சிங்கப்பூர் மாறத் தொடங்கியது.

கடுமையான தண்டனைகள்

ஊழல் மற்றும் போதைப் பொருள் போன்றவை சமூகத்தைச் சீரழிப்பவை என்பதைத் தீர்க்கமாக நம்பியவர் லீ குவான். இதனால், ஊழலைக் கண்காணிக்க உயர் கண்காணிப்பு அமைப்பு ஒன்றை அவர் நிறுவினார். அதேபோல் பிரம்படி போன்ற கடுமையான தண்டனைகளையும் அவர் கொண்டுவந்தார். இதற்கு ஒரு சுவாரஸ்யமான பிண்ணனியையும் சொல்வார்கள். சிறுவயதில் விலை உயர்ந்த பொருள் ஒன்றை லீ குவான், வீணாக்கியிருக்கிறார். இதற்குத் தண்டனையாக அவரை கிணற்றில் வீச குடும்பத்தில் முடிவெடுத்து அவரைக் கிணறு வரை கொண்டு சென்று விட்டார்களாம். இதனால், பயத்தில் உறைந்து போயிருந்த சிறுவன் லீ குவான், அதன் பிறகு சேட்டைகள் செய்வதைக் குறைத்துக் கொண்டாராம். இப்படி கடுமையான தண்டனைகள் அவசியம் என்பது சிறுவயதிலேயே அவரது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதாம். இதையே தான் ஆட்சிக்கு வந்தபிறகு லீ குவான் நடைமுறைப்படுத்த முன்வந்தார். இதை மனித உரிமை அமைப்புகள் பல விமர்சித்தாலும் இந்தத் தண்டனை முறைகளாலேயே சிங்கப்பூரின் வளர்ச்சி சாத்தியம் என்பதை மறுப்பதற்கில்லை.

Related posts