சிங்கப்பூரின் 74வது தேசிய நினைவுச் சின்னமாக “சிலோசோ கோட்டை” அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் வரலாறு நம்ம மிரட்சியடைய வைக்கிறது.
செண்டோசா தீவில் அமைந்துள்ள சிலோசோ கோட்டைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1878ஆம் ஆண்டு தீவின் கடற்கரையைத் தற்காத்துக்கொள்ள இந்த கோட்டை கட்டப்பட்டது. 1942ல் ஜப்பானியப் படைகளை முறியடிக்க பிரிட்டிஷ் படையினர் இந்த கோட்டையைப் பயன்படுத்தினர்.
அப்போது, சிலோசோ கோட்டையின் துப்பாக்கிகளில் இருந்து பறந்த புல்லட்டுகள், புலாவ் புகோம் மற்றும் புலாவ் செபரோக்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அழித்தன. ஜப்பானியர்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுத்தனர், மேலும் ஆக்கிரமிப்பின் போது ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் வீரர்களுக்கும், அவர்கள் சரணடைந்த பின்னர் ஜப்பானிய வீரர்களுக்கும் போர்க் கைதிகளாகப் பணியாற்றினர்.
அதன் பிறகு, 1960களில், இந்தோனேசிய இராணுவப் படைகளைத் தடுக்க குர்கா படையினர் கோட்டையைக் காவல் காத்தனர். 1963 முதல் 1966 வரை – கான்ஃபிரான்டாசி காலத்தில் – இந்தோனேசிய நாசகாரர்கள் புலாவ் பிளகாங் மாட்டி மற்றும் கெப்பல் துறைமுகத்தில் தரையிறங்குவதைத் தடுப்பதற்காக 10வது கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவு கோட்டையை பாதுகாத்தது.
சிலோசோ கோட்டை மட்டுமல்ல, இது அமைந்துள்ள செண்டோசா தீவும் பெரும் மர்மங்களும், இருள் பக்கங்களும் நிறைந்த ஒன்று தான். இந்தத் தீவின் சிறப்பம்சம் என்னவெனில், மற்ற தீவுகளில் இருந்து தள்ளி, தனிமையில் இருக்கிறது. செண்டோசா என்னும் இத்தீவுக்கு “அமைதி” என்று பொருள். ஆனால், இந்தத் தீவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு என்ன பெயர் இருந்தது தெரியுமா? ‘புலாவ் பெலகங் மாடி’. அப்படியென்றால் ‘மரணத்தீவு’ என்று அர்த்தம். பல நூற்றாண்டுகளாக இத்தீவு ஒரு மர்மமான ஒன்றாகவே இருந்தது. கொள்ளைக் கூட்டம், உலகப் போர் என இந்தத் தீவு ஒரு இருள் நிறைந்த பகுதியாகவே இருந்தது.
வருடம் தோறும் 20 மில்லியன் சுற்றுலாவாசிகள் வந்து போகும் இந்தத் தீவு ஒரு காலத்தில் யாருமே போகாத மர்மத்தீவாக இருந்தது. செண்டோசா தீவின் பழைய பெயருக்கு முக்கிய காரணம், “கடற்கொள்ளை” தான். 500 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்தத் தீவில் கடற்கொள்ளையர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர். தாக்குதல் நடத்தியுள்ளனர். போரில் வீரமரணமடைந்த வீரர்களை மொத்தமாக இந்தத் தீவில் புதைத்ததும் இந்தத் தீவின் பழைய பெயருக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, 18ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தில் முக்கால்வாசிப் பேர் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. செண்டோசா தீவின் மரண ஓலம் அதன்பிறகும் ஓயவில்லை, இரண்டாம் உலகப் போரில், அதாவது 1942ல் சிங்கப்பூர் ஜப்பானிடம் சிக்கிய போது, ஆஸ்திரேலிய மற்றும் ஆங்கிலேயே போர் கைதிகளை அடைத்துவைக்க ஒரு சிறைச்சாலையாக இத்தீவு பயன்படுத்தப்பட்டது. ஜப்பானுக்கு எதிராக செயல்பட்ட சிங்கப்பூர் சீனர்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவிக்கும் இடமாகவும் இது இருந்திருக்கிறது.
ஆனால், 1970க்கு பிறகு நிலைமை மாற ஆரம்பித்தது. சிங்கப்பூர் அரசு இத்தீவுக்கு செண்டோசா என்று பெயரிட்டது. இப்பொழுது சிங்கப்பூர் சுற்றுலாவின் மையமாக இது உள்ளது. இங்கு ஒரு வில்லாவின் விலை 37 மில்லியன் டாலர்களில் இருந்து தொடங்குகிறதாம். இருள்சூழ்ந்து கிடந்த இந்த இடத்தில், தற்போது 17 நட்சத்திர ஹோட்டல்களும், கோல்ப் மைதானங்களும், சிங்கப்பூரின் யுனிவர்சல் ஸ்டுடியோவும் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த அழகிய செண்டோசாவில் அழகிய இடமாக இருந்து, சிங்கப்பூரை பாதுகாத்து வந்த சிலோசோ கோட்டை இப்போது சிங்கப்பூரின் 74வது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது தானே!