SINGAPORE: மீண்டும் பணியிடத்தில் நடந்த கோர விபத்தில், வெளிநாட்டு ஊழியர் ஒருவர் நேற்று (ஆக.10) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், சிங்கப்பூரில் உள்ள Singapore Towing Equipments நிறுவனத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று Kranji-யில் காலை 11 மணியளவில், தனியார் பேருந்து ஒன்றை ரிவர்ஸ் எடுப்பதற்கு உதவப் போய், டிரைவரின் அலட்சியத்தால் அந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, Workplace Safety and Health (WSH) Council வெளியிட்டுள்ள செய்தியில், “ComfortDelGro பேருந்து ஒன்றை ரிவர்ஸ் எடுக்க அதன் ஓட்டுநர் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதன் வழித்தடத்திற்கு அடுத்த இடத்தில் தூணுக்கு அருகே நின்றிருந்த அந்த ஊழியர், பேருந்தை ரிவர்ஸ் எடுக்க உதவியுள்ளார்.
ஆனால், சமிக்ஞயை சரியாக கவனிக்காத அந்த பேருந்தின் டிரைவர் வண்டியை தவறாக இயக்க, பேருந்துக்கும் அதே தூணுக்கும் இடையில் சிக்கிய அந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்” என்று தெரிவித்துள்ளது.
விபத்து நடந்தவுடன், உடனடியாக அந்த ஊழியர் Khoo Teck Puat Hospital-க்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் Towing Equipments நிறுவனத்தின் மேலாளரைத் தொடர்பு கொண்டபோது, அவர் அந்த ஊழியரின் பெயர் குறிப்பிட மறுத்துவிட்டார். மேலும், விபத்தில் என்ன நடந்தது என்பது சரியாகத் தெரியவில்லை என்றும், அதிகாரிகளால் தனக்கு முழு விவரங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
அதேசமயம், விபத்துக்குள்ளான பேருந்து ComfortDelGro நிறுவனத்திற்கு சொந்தமானது என்று ComfortDelGro குழுமத்தின் தலைமை வர்த்தக மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி Tammy Tan தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், அந்த பேருந்தை இயக்கிய டிரைவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தின் மூலம், பணியிடத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்த ஊழியர் சீனாவைச் சேர்ந்தவர் என்பதும், அவரது வயது 43 என்பதும் சற்றுமுன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.