TamilSaaga

கபடி.. கபடி… சிங்கப்பூரில் தொடையைத் தட்டி… கெத்து காட்டிய வெளிநாட்டு ஊழியர்கள் – Final-ல் தோற்றாலும் “மீசையை முறுக்கிய” ஆட்டம்!

SINGAPORE: சிங்கப்பூரில் சப்தம் போடாமல் நடந்து முடிந்துள்ளது IA RED DOT SPORTS CARNIVAL 2022 தொடர்.

ஆம்! Singapore Indian Association கடந்த 1923ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதன் 99ம் வருடத்தையொட்டி கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழர்களின் வீரத்தின் அடையாளமான கபடி தொடரில் பல ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கடந்த ஆகஸ்ட்.7ம் தேதி கபடி போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட்டன. மொத்தம் 10 அணிகள் இந்த கபடி தொடரில் பங்கேற்றன. இதில், இறுதிப் போட்டியில் புதுக்கோட்டை மற்றும் வடுவூர் அணிகள் மோதின. ஆக்ரோஷமாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் புதுக்கோட்டை வெற்றிப் பெற்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடுவூர் அணி ‘runner up” ஆனது.

கோப்பையை வென்ற புதுக்கோட்டை அணி

தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்திய அளவில் பல விளையாட்டு வீரர்களை தந்த ஊர் வடுவூர். இங்கிருந்து உருவான ஏராளமான விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு அளவிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபெற்று சாதனை படைத்து வருகிறார்கள். குறிப்பாக, வடுவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கபடி வீரர்கள் அதிகம்.

இதன்மூலம் வேலைவாய்ப்புகளைப் பெற்று அரசு பணிக்குச் சென்றவர்களும் ஏராளம். பணி நிமித்தம் காரணமாக இவர்கள் வெளியூர்களிலோ, வெளிநாடுகளிலோ வசித்தாலும் கூட, ஊர் மக்களுக்கும் இவர்களுக்குமிடையேயான பாசப்பிணைப்பு எப்போதும் இழையோடிக்கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பில்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்த பாராசூட் வீரர் – சீக்கிரம் உயிருடன் மீண்டு வாங்க சார்!

இன்னும் சொல்ல வேண்டுமெனில், வடுவூருக்கு மிக அருகில் இருக்கும் சூழியக்கோட்டை பகுதியைச் சேர்ந்த K. Baskaran என்கிற Baskaran Kasinathan தான் இந்திய தேசிய அணியின் கபடி வீரர். அதுமட்டுமின்றி, இந்திய கபடி அணியின் பயிற்சியாளராகவும், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். இவ்வளவு ஏன்.. நம் சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியாவின் தேசிய கபடி அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் இதே பாஸ்கரன் தான்.

இப்படி, நாட்டுக்காக பல விளையாட்டு வீரர்களையும், ஆளுமைகளையும் உருவாக்கி பெருமை வடிவூரைச் சார்ந்த பகுதிகளுக்கு உண்டு. எனினும், IA RED DOT SPORTS CARNIVAL 2022 இறுதிப் போட்டியில் வடுவூர் அணி தோற்றாலும், ஒரு பலம் வாய்ந்த மற்றொரு அணியான புதுக்கோட்டை மாவட்ட அணியிடம் தான் தோற்றுள்ளது என்பது பெருமையே.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts