இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிக அதிக எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அங்கு புதிதாக 8,084 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையும், இரண்டாம் அலையும் தாங்க முடியாத இழப்புகளை ஏற்படுத்தியது. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் கேட்டன. பிணங்களை எரிக்க இடப் பற்றாக்குறை ஏற்படும் அளவும் தத்தளித்தது அந்நாடு. எனினும், மூன்றாவது அலையில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை.
இன்றைய சூழலில், உலகளவில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேற்று (ஜூன்.12) தமிழகத்தில் ஒரே நாளில் 249 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 124 பேர் அடக்கம்.
இரண்டாம் அலை ஏற்பட்ட நேரத்தில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டது. இது மெல்ல மெல்ல குறைந்து தினசரி பாதிப்பு 1000 என்ற அளவுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 8,000க்கும் அதிகமான தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட, தற்போது மும்பையில் மட்டும் தினசரி 1,700-க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொற்றின் பாதிப்பு குறைந்ததால் மாஸ்க் அணிவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர் சில மருத்துவர்கள்.
இந்த சூழலில், தொற்று பரவல் நிலை இதே போன்று இன்னும் ஒரு மாதம் நீடித்தால் இந்தியாவில் நான்காம் அலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ICMR-ன் மூத்த அதிகாரி ஒருவர் ‘நான்காம் அலை’ என்ற தகவலை மறுத்துள்ளார். இப்போதைக்கு அதைப்பற்றி எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, இந்த நிமிடம் இந்தியாவில் தொற்று அதிகரித்து வருகிறது என்ற செய்தி மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தற்போது இந்தியா வரும் பயணிகள் இந்த திடீர் தொற்று அதிகரிப்பால் சற்று கலக்கத்தில் உள்ளனர். சிங்கப்பூரில் இந்த ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால், இந்தியர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதேபோல், சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும், சுப துக்க காரியங்களில் கலந்து கொள்ள இந்தியா திரும்பி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கே செல்லாமல் இருந்த பல ஊழியர்களும் இப்போது இந்தியா திரும்பி வருகின்றனர். ஆனால், இப்போது இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 8,000க்கும் மேல் அதிகரித்து வருவதால், மீண்டும் சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்ப புறப்படுவதில் அதிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட கேட்டுக் கொள்கிறோம்.