சிங்கப்பூர் காவல்துறையில் பணிபுரியும் என்பவர், தமிழகத்தில் பெண்களை திருமணம் செய்து, ஓரிரண்டு மாதங்களில் பெண்ணுக்கு மனநிலை சரியில்ல, நடத்தை சரியில்லை என்று கூறி சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி, திருமணத்தின் போது வரதட்சணையாக வந்த நூற்றுக்கணக்கான பவுன் தங்க நகைகளை தானே வைத்துக் கொண்டு ஏமாற்றுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Behindwoods செய்தி நிறுவனம் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் மகன் முகமது ரஃபீக். சிங்கப்பூரில் குடியுரிமை உள்ள ரஃபீக் இங்கு காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த தஸ்னீமா எனும் பெண்ணை கல்யாணம் செய்திருக்கிறார். சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக அந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது. 150 சவரன் நகை, 5 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரம் என்று லட்சக்கணக்கில் மாப்பிள்ளையாக இவருக்கு பெண் வீட்டார் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
பிறகு புதுமணத்தம்பதிகளாக இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர். ஆனால், வந்திறங்கிய சில நாட்களிலேயே தஸ்னீமா-வின் நடவடிக்கைகள் சரியில்லை, மனநிலை சரியில்லை என்று ஏதேதோ காரணங்கள் சொல்லு அவரை சொந்த ஊருக்கே அனுப்பி வைத்திருக்கிறார். மனைவியை தாய் வீட்டுக்கு திருப்பி அனுப்பிய ரஃபீக், கல்யாணத்துக்கு போட்ட நகை, பரிசுப்பொருட்கள் என எதையும் திருப்பித் தரவில்லை. ஆனால், Divorce Notice மட்டும் அனுப்பி இருந்திருக்கிறார்.
இதுதொடர்பாக, தஸ்னீமா வீட்டார் சிங்கப்பூர் போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அபர்நிஷா எனும் பெண்ணை இரண்டாவதாக ரஃபீக் திருமணம் செய்துள்ளார். இந்த கல்யாணத்துக்கு அந்த பெண் வீட்டார் 1 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், சிங்கப்பூர் காவலரான ரஃபீக் முதல் மனைவிக்கு என்ன செய்தாரோ அதையேத்தான் இரண்டாவது மனைவிக்கும் செய்திருக்கிறார். அதாவது, இரண்டாவது மனைவியுடன் சிங்கப்பூர் வந்து ஒரு மாதம் குடும்பமும் நடத்திவிட்டு, பிறகு அபர்நிஷா நடவடிக்கை சரியில்லை என்று சொல்லி அவரையும் அவரது சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தை வைத்துக் கொண்டு திருப்பி அனுப்பிய ரஃபீக், மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இதையறிந்த அபர்நிஷா பெற்றோரும் சிங்கப்பூர் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், மூன்றாவது திருமணம் செய்ய ரஃபீக் இந்தியா வந்த நிலையில், முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் அவர்களது குடும்பத்தாருடன் வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பிறகு மீது ரஃபீக் மீது இரு குடும்பத்தாரும் திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். ஆனால், ரஃபீக் சிங்கப்பூர் காவல் அதிகாரி என்பதால், அவர் மீது எப்படி புகார் எடுப்பது என்று மகளிர் காவல் நிலையத்தில் தயங்கியதாக சொல்லப்படுகிறது.
எனினும், பிறகு புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கையும் எடுத்துள்ளனர். இதுகுறித்து இரு பெண்களின் பெற்றோரும் கூறுகையில், ‘எங்களுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரி ரஃபீக் மீது தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தி மற்றும் வீடியோ “Behindwoods” தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தித் தளம் சார்பில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். அங்கு காவலர்களிடம் பேசிய பிறகு சிங்கப்பூர் காவலர் ரஃபீக் வழக்கின் உண்மைத்தன்மை குறித்து முழுமையான தகவல்களுடன் செய்தி வெளியிடப்படும்.