சிங்கப்பூர்… உலகில் பல துறைகளில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாய் விளங்கும் நாடு. குறிப்பாக, சுத்தம், சுகாதாரம், தொழில்நுட்பம் என சகல துறைகளிலும் கடும் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் நாடு இது.
குறிப்பாக, ஊழல் என்பது இங்கு கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாதது. அது அரசாங்க அதிகாரியாக இருந்தாலும் சரி… தனியார் நிறுவன அதிகாரியாக இருந்தாலும் சரி.. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சுளுக்கு எடுக்கப்படும்.
அதேபோல், தொழில்நுட்பத்திலும் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது. இவை அனைத்திற்கும் காரணம் விதிமுறைகளும், கட்டமைப்புகளும் தான். “No Means No” எனும் பிரபல சினிமா வசனத்தை போல், இங்கு ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டால் செய்யக்கூடாது தான். மீறினால் தண்டனைகள் மிக மிக கடுமையாக இருக்கும்.
இதனால் தான் சிங்கப்பூர் என்றாலே மற்ற நாட்டு மக்கள் Excitement ஆகின்றனர். தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது சிங்கப்பூரைச் சுற்றிப்பார்த்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இப்படி பல பிளஸ் பாயிண்ட்களை கொண்டிருக்கும் சிங்கப்பூரில், நேற்று நடந்த சம்பவம் ஒன்று ‘என்னப்பா இது..?” என்று பலரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.
ஆம்! நேற்று (மே 10) காலை இதுவரை இல்லாத அளவுக்கு MRT நடைமேடைகளில் பயணிகள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டதற்கு SMRT மன்னிப்பு கேட்டுள்ளது.
பிஷன் சர்க்கிள் லைன் MRT நடைமேடையில் நேற்று காலை இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக ஊடக தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ரயில் நடைமேடையிலும், ரயில் பிளாட்பாரத்திற்கு மேலே அமைந்துள்ள ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியிலும் கடும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
பிஷன் வடக்கு-தெற்கு லைன் ஸ்டேஷனை பிஷன் சர்க்கிள் லைன் ஸ்டேஷனுடன் இணைக்கும் நடைபாதையும், பிஷன் சர்க்கிள் லைன் ரயில் பிளாட்பாரத்திற்கு கீழே செல்லும் எஸ்கலேட்டர்களும் இதேபோல் பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு SMRT தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து Mothership கேள்விகளுக்குப் பதிலளித்த SMRT இன் சர்க்கிள் லைன் தலைவர் ஹோ ஃபூ சிங், “பீக்-ஹவரில் பயணிகளின் பயணங்கள் பாதித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். காலை 8 மணியளவில் circle line-ல் சிக்னல் தொடர்பான பிழை ஏற்பட்டது.
இது ஹாலண்ட் கிராமம் மற்றும் ஹவ் பார் வில்லா நிலையங்களுக்கு இடையே இரு எல்லைகளிலும் ரயில் இயக்கத்தை பாதித்தது, ஆனால் ரயில் சேவை தொடர்ந்து கிடைத்தது. ஐந்து நிமிடங்களில் இந்த தவறு சரி செய்யப்பட்டது. இருப்பினும், சில நிலையங்களில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார்.
எனினும், சில பயணிகள் ரயிலை பிடிக்க 30 நிமிடங்கள் வரை காத்திருக்க நேரிட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 5 நிமிட தவறு தான் என்றாலும், பயணிகள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்ததை நாம் புகைப்படங்கள் வாயிலாகவும், வீடியோக்கள் வாயிலாகவும் காண முடிந்தது.
மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயங்கும் சிங்கப்பூர் போன்ற நாட்டில், ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தவறு ஏற்பட்டால், அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமே சரியான உதாரணம்.