சிங்கப்பூரின் Tuas சோதனைச்சாவடி வழியாக அத்துமீறி சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சித்த இரண்டு வெளிநாட்டினர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tuas சோதனைச்சாவடியில் கார்களுக்கான தானியங்கி கவுண்டர் மூலம் அதிவேகமாக உள்ளே நுழைய அவர்கள் முற்பட்டபோது clearance counter மீது கார் மோதி கார் கவிழ்ந்தது. இந்நிலையில் சீன நாட்டவர் சென் சோங்கிங், 35, மற்றும் வியட்நாம் நாட்டவர் ஹோ தி மை நங், 31, ஆகியோர் 5 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 8 அதிகாலை 2.14 மணியளவில், மலேசியாவின் சுல்தான் அபு பக்கர் வளாகத்தின் அருகே இருந்த Departure Clearance பகுதியில் நிறுத்தாமல் அந்த வாகனம் வேகமாக கடந்து செல்ல, மலேசிய அதிகாரிகள் அந்த காரை விரட்டிப்பிடிக்க பின் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் Tuas சோதனைச்சாவடியை அந்த கார் நெருங்குவதை கண்ட ஒரு அதிகாரி அவசரகால சமிக்கையை பயன்படுத்தி அந்த கார் தொடர்ந்து செல்லாமல் தடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த கார் Clearance கவுண்டர் அருகே மோதி கவிழ்ந்ததில் சிங்கப்பூர் ICA அதிகாரி ஒருவருக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
வாகனத்தில் இருந்த இரு பயணிகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது சிங்கப்பூர் துணை காவல்துறை அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர், மேலும் அந்த காரின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் காயமடைந்த ICA அதிகாரி மற்றும் காரில் பயணித்த அந்த வியட்நாம் பெண் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விசாரணையில் அந்த இரண்டு பயணிகளும் சரியான பயண ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்றும், பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் ICA தெரிவித்தது.
மேலும் வாகனத்தின் ஓட்டுநர் ஏற்கனவே சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும், ஆரம்பகட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டதும் தெரியவந்தது.