சிங்கப்பூரில் தனது வீட்டுப் பணியாளரை சித்திரவதை செய்து இறுதியில் கொன்றதற்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் காயத்திரி முருகையன், இன்று புதன்கிழமை (மே 4) சிங்கப்பூர் சிறைத்துறை (SPS) மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு ஆவணங்களை வெளியிட நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால் அவரது அந்த மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிற ஆவணங்களோடு காயத்திரி, மியான்மரில் இருந்து வந்த பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜூலை 2016 முதல் விளக்கமறியலில் உள்ள அவரது தாயார் பிரேமா எஸ். நாராயணசாமி, 63, ஆகியோரின் மருத்துவ பதிவுகளை கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனக்கும் அவரது தாயாருக்கும் சிறையில் முறையான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளதாக காயத்திரி குற்றம் சாட்டினார். ஆனால் இரண்டு பெண்களுக்கும் தகுந்த சிகிச்சை மற்றும் கவனிப்பு அளிக்கப்பட்டதாக SPS (Singapore Prison Service) தெரிவித்துள்ளது.
42 வயதான அவர், சக கைதிகளால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக அவர் அளித்த புகார்கள் தொடர்பாக SPS வைத்திருக்கும் சம்பவ பதிவுகளையும் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். மேலும் தனது புகார்கள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காயத்திரி வலியச் சென்று சண்டையை துவங்கிய இரண்டு சம்பவங்கள் உட்பட – அனைத்து வழக்குகளையும் முழுமையாக விசாரணை செய்துள்ளதாகவும். மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துணை அரசு வக்கீல் முகமது பைசல் முகமது அப்துல் காதிர் எழுத்துப்பூர்வ வெளியிட்ட அறிக்கையில் : “அவருடைய முழு விண்ணப்பமும், சில ஆதாரங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கற்பனையான நம்பிக்கையுடன் ஆதாரங்களைத் தேடும் முயற்சியாகவே இது உள்ளது” என்றார்.
ஒரு இல்லத்தரசியாக இருந்த காயத்திரி, பாதிக்கப்பட்ட 24 வயதான பியாங் ங்கைஹ் டோனை கொடுமை செய்து பட்டினி போட்டு இறுதியில் கொன்றதற்காக உயர் நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தண்டனை பெற்றார்.