நேற்று சீனாவில் நடந்த பயங்கர விமான விபத்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் அந்த China Eastern Airlines பயணிகள் விமானம் சுமார் 29,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது Nose Dives என்று அழைக்கப்படும் விமானத்தின் மூக்கு பகுதி கீழ்நோக்கி இருந்தவாறு செங்குத்தாக கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் உயிர் பிழைத்தவர்களை தேடியபோது யாரும் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
இந்த விபத்து நடந்த 18 மணி நேரத்திற்கு பிறகு இன்று மார்ச் 22 செவ்வாய்க்கிழமை காலை “விமானத்தின் இடிபாடுகள் விபத்து நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன என்றும், ஆனால் இதுவரை, விமானத்தில் இருந்தவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் அம்மாநில செய்தி நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் இதுபோன்ற ஒரு மோசமான விமான விபத்து நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல ஒரு விமானத்தின் மூக்கு பகுதி கீழ் நோக்கி இருக்கும் நிலையில் செங்குத்தாக 29,000 அடியில் இருந்து விழுவது பலருக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் பயணித்த 132 பேரும் இறந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. சிங்கப்பூர் அரசு இந்த நிகழ்விற்கு தங்கள் வருத்தத்தைய தெரிவித்துள்ளது, மேலும் அந்த விமானத்தில் சிங்கப்பூரர்கள் யாரும் பயணிக்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.
மூத்த விபத்து ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் மற்றும் முந்தைய விபத்து அறிக்கைகளின்படி, இதுபோல செங்குத்தான முறையில் விழுந்த விமான விபத்துகள் ஏற்கனவே பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. விமான அதிகாரி ஒருவர் பேசும்போது “ஒரு விமானம் இந்த கோணத்தில் விழுவது என்பது கடினமான ஒன்று” என்று கூறியுள்ளார். இந்த விமான பயணத்தில் மேலும் பல மர்மங்கள் அடங்கியுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றது.