கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொள்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 452 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. COVID-19 தொற்று நோயால் தனிமைப்படுத்துதல் மற்றும் உளவியல் ரீதியான துன்பங்கள் அனுபவித்ததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
SOS எனப்படும் சிங்கப்பூரின் சமாரிடன் என்ற நிறுவனம் இன்று (ஜூலை 8) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட தற்கொலை வழக்கு எண்ணிக்கை 2019 ல் பதிவு செய்யப்பட்ட 400 வழக்குகளில் இருந்து 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
இந்த அதிகரிப்பு அனைத்து வயதினரிடமும் காணப்பட்டது என்றும், ஆனால் குறிப்பாக முதியவர்களிடையே அதிக அளவில் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. முதியவர்களை பொறுத்தவரை 1991க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகளைப் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டில் 60 வயது மேற்பட்டவர்களில் மொத்தம் 154 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மற்ற வயதினரில் – 10 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் மற்றும் 30 முதல் 59 வயதுடையவர்கள் – தற்கொலைகளின் எண்ணிக்கை 2019ல் இருந்து 7 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, தற்கொலை இறப்புகளின் எண்ணிக்கை 100,000 குடியிருப்பாளர்களுக்கு 8.88 ஆக உயர்ந்துள்ளது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 0.88 அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தாக்கம் பொருளாதார ரீதியாக இல்லாமல் மக்களை உளவியல் ரீதியாகவும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.