சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 34 வயது நபர் ஒருவர் இன்று புதன்கிழமை (பிப்ரவரி 16) மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டார். இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கிருஷ்ணா ராவ் நரிசாமா நாயுடு, கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி பயோனியர் சாலைக்கு அருகில் சார்ஜென்ட் ஃபிர்ஹான் அப்துல் ராஷிடம் $55 வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஒரு போக்குவரத்து விபத்துக்காக அவரை விசாரிக்க வேண்டாம் என்று கூறுவதற்காக அந்த மலேசியர், சிங்கப்பூர் போக்குவரத்து அதிகாரிக்கு $5 மற்றும் $50 பணத்தை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. சார்ஜென்ட் ஃபிர்ஹான் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும், மேற்கொண்டு வழக்கு பணியகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் கூறியது.
இறுதியில் தற்போது கிருஷ்ணா $7,000 ஜாமீனில் வெளிவந்த நிலையில், வரும் மார்ச் மாதம் 2ம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு $1,00,000 வரை அபராதமும், ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது சிங்கப்பூரை அரசை பொறுத்தவரை பல விதி மீறல்கள் கடுமையான குற்றங்களாக பார்க்கப்படுகின்றன. ஆகவே மக்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.