ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று போர்த்துகீசிய அசோர்ஸ் தீவுக்கூட்டத்தின் அருகே தீ பிடித்த நிலையில் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்போது கடலில் மூழ்கியது பெரும் பொருள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. Felicity Ace என்ற அந்த கப்பல், கடந்த மார்ச் 1ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரின் ஷென்டன் வேயில் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்ட MOL ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இது Porsche மற்றும் Bentley போன்ற விலை உயர்ந்த கார்கள் உள்பட சுமார் 4000 சொகுசு கார்களை சுமந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் ஜெர்மனியின் எம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் ரோட் தீவுக்கு சென்று கொண்டிருந்த போது, அதன் பயணத்தின் ஆறாவது நாளான பிப்ரவரி 16ம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கப்பலில் பயணம் செய்த 22 பணியாளர்களும் பாத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பிப்ரவரி 25 அன்று அசோர்ஸிலிருந்து “பாதுகாப்பான பகுதிக்கு” Felicity Aceஐ இழுத்துச் செல்ல ஒரு பெரிய இழுவைப்படகு அனுப்பப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் 1ம் தேதியன்று, போர்த்துகீசிய கடற்படையின் கூற்றுப்படி, இழுக்கப்படும்போது கப்பல் “நிலைத்தன்மையை இழந்து மூழ்கியது” என்று கூறப்படுகிறது. 650 அடி நீளமுள்ள அந்த கப்பல் சுமார் இரண்டு வாரங்களாக இரவும் பகலும் தண்ணீரில் எரிந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதம் காப்பீட்டின் மூலம் கவர் செய்யப்பட்டதாகவும், இதற்கு சுமார் 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்றும் Reuters தெரிவித்துள்ளது. பென்ட்லி நிறுவனம் தனது 189 கார்கள் கப்பலில் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும் Porsche நிறுவனம் தனது 1,100 கார்கள் அந்த கப்பலில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதியில் சுமார் 3,500 மீட்டர் ஆழத்தில் கப்பல் இருக்கும் போது மூழ்கிய கப்பலின் எரிபொருள் தொட்டிகள் சேதமடையக்கூடும் என்று அஞ்சப்படுவதாக BBC தெரிவித்துள்ளது. இது எண்ணெய்க் கசிவுக்கு வழிவகுக்கும் மற்றும் பவளப்பாறைகள், பவளக்காடுகள் மற்றும் கடற்பாசிகளால் மூடப்பட்டிருக்கும் பகுதியின் தனித்துவமான கடற்பரப்பை சேதப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் Felicity Ace போன்ற சரக்குக் கப்பலில் மூன்று மில்லியன் லிட்டர் கனரக எரிபொருளையும், எண்ணெயையும் வைத்திருக்க முடியும் என்றும் தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.