இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள அவரது வீட்டின் முன் கடந்த புதன் கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இலங்கையின் முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திரவும் கலந்து கொண்டார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென, பிரதமர் ரணில் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தனர். இதனால், போலீசாருக்கு பெண்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
குறிப்பாக, முன்னாள் எம்.பி. ஹிருணிகாவை பிரதமர் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்காக பெண் போலீசார் அரண் போல் அவரை சுற்றி வளைத்து வெளியே தள்ளினார்கள்.
இந்த தள்ளுமுள்ளு போராட்டத்தை பத்திரிகைகள் வளைத்து வளைத்து படம் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது புடவை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹிருணிகாவை புகைப்படம் எடுத்த சிலர், சோஷியல் மீடியாக்களில் அவற்றை பகிர்ந்து, ஹிருணிகாவின் மார்பகங்கள் குறித்து ஆபாசமாக ட்வீட் செய்திருந்தனர்.
அந்த பதிவுகள் இலங்கை முழுக்க வைரலானது. இதில் கொடுமை என்னவெனில், ஏகப்பட்ட ஐடிக்களில் ஹிருணிகாவின் மார்பகங்களை குறித்து சகட்டு மேனிக்கு பதிவு செய்திருந்தனர். வார்த்தைகளில் அவ்வளவு வக்கிரம் இருந்தது. ஏதோ பார்க்காத ஒன்றை பார்த்தது போல் வர்ணித்து ட்வீட் செய்திருந்தனர்.
இந்நிலையில், அவர்களின் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஹிருணிகா பிரேமசந்திர, தனது பேஸ்புக் பக்கத்தில் மார்பகங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
“என் மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். நான் எனது மூன்று அழகான பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து, எனது மொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். போராட்டத்தின் போது வெளிப்பட்ட என் மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது தங்கள் தாயின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
எப்படியென்றாலும், என் மார்பகங்களைப் பற்றி நீங்கள் கருத்துக்கள் பரிமாறி, மீம்ஸ் உருவாக்கி, கொண்டாடிய போது, எங்கோ ஒரு இடத்தில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!” – ஹிருணிகா பிரேமச்சந்திர என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எம்.பி ஹிருணிகாவின் இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.