உலக அளவில் மனிதனை போல சிந்திக்கக்கூடிய விலங்கு இனங்களில் சிம்பன்சிகளும் ஒன்று. அதீத சிந்தனை ஆற்றல் மட்டும் இல்லாமல் மனிதனை போல பொருட்களை பயன்படுத்தும் யுத்திகள் அவைகளுக்கு அத்துப்படி.
அந்த வகையில் மனிதர்களை போலவே பொருட்களை பயன்படுத்த, பின் அதற்காக தனது பெற்றோரிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டது ஒரு குட்டி சிம்பன்சி. Weibo என்ற மீம் பக்கம் ஒன்றில் கடந்த மார்ச் 13 அன்று வெளியான அந்த 9 வினாடி வீடியோவில் ஒரு சுவாரசியமான விஷயம் நடந்துள்ளது.
அந்த வீடியோவில் ஒரு இளம் சிம்பன்சி மிருகக்காட்சிசாலை வளாகத்தின் மீது கற்களை வீசுவதைக் காணமுடிந்தது. கற்களை எறிந்துவிட்டு கெத்தாக நின்ற அந்த குட்டி குரங்கு, அதன் பின்னால் யாரோ வருவதை உணர்ந்து திரும்பி பார்த்தபோது அது திடுக்கிட்டது. காரணம் அந்த குட்டி சிம்பன்சியின் பெற்றோர்களில் ஒன்று கையில் ஒரு மரகுச்சியோடு வந்து “இப்படி செய்வியா” என்று கேட்பது போல அந்த குட்டி குரங்கை வெளுத்து வாங்கியது.
குறும்புத்தனம் செய்துவிட்டு பெற்றோரை கண்டதும் சந்து சந்தாக சுற்றும் நமது குழந்தைகளைப்போல அந்த குட்டியும் கம்போடு வரும் பெற்றோரை கண்டதும் தலைதெறிக்க ஓடியது காண்போரை குறுநகைக்கவைத்தது.
இந்த வீடியோ வெய்போவில் 4,67,000 Likes மற்றும் 20,000 Shares பெற்றுள்ளது. ஆன்லைனில் பலர் இந்த காட்சியை ஆச்சர்யத்துடன் பார்த்துவருகின்றனர். பிள்ளை தவறு செய்கிறது என்று உணர்ந்து செல்லம் காட்டாமல் வெளுத்து வாங்கிய பெற்றோருக்கு பாராட்டுகளும் குவிந்த்து வருகின்றது.
சில மனித பெற்றோரை விட அந்த சிம்பன்சிக்கு சிறந்த குழந்தை வளர்ப்பு திறன் இருப்பதாக சிலர் சுட்டிக்காட்டினர். உண்மையில் மிருகங்களிடம் இருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. செல்லம் கொடுத்து பிள்ளைகளை தவறான முறையில் வளர்ப்பதைவிட இப்படி கொஞ்சம் கட்டுப்பாடுடன் வளர்த்தால் நன்றாக இருக்கும்.