TamilSaaga

காதலியின் பெட்ரூமில் இருந்தபடியே ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜானி – HOPIN ஆப்-இன் வெற்றிக்கதை தெரியுமா?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பௌஃபர்ஹாட் (Johnny Boufarhat) திடீர் சென்சேஷனாகியிருக்கிறார். என்ன காரணம் என்று கேட்கிறீர்களா.. தனது காதலியின் பெட்ரூமில் இருந்தபடியே இவர் கடந்த 2018-ல் கோடிங் எழுதிய ஆப் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்போடு இங்கிலாந்தின் 113-வது பணக்காரர் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் ஜானி.

Johnny Boufarhat

ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட ஜானியின் சக்ஸஸ் எங்கே தொடங்கியது… கிட்டத்தட்ட மரணம் வரை சென்று, அதிலிருந்து மீண்டு வெற்றிகரமாக கோடிங் மூலம் தனது விதியை அவர் எப்படி மாற்றினார் தெரியுமா… வாங்க தெரிஞ்சுக்கலாம்.

“சிங்கப்பூரில் கொரோனா சிகிச்சையான மாத்திரைகள்” : எப்போது பயன்பாட்டிற்கு வரும்? – முழு விவரம்

பெரும்பாலான என்ஜினீயரிங் ஸ்டூடண்டுகளைப் போலவே மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு வேலைபார்க்கத் தொடங்கியிருக்கிறார் ஜானி பௌஃபர்ஹாட். ஆசியக் கண்டத்தின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த அவர் தெற்காசிய நாடுகள் முழுவதும் சுற்றத் தொடங்கியிருக்கிறார். 2015-ம் ஆண்டு அவர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. விஷக் கடியால் கடுமையான பாதிப்புக்குள்ளான அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மொத்தமாகக் குறைந்து போயிருக்கிறது. அந்த சூழலை எதிர்க்கொண்ட விதம் பற்றி ஜானி பேசும்போது, `அது என்னை வேறொரு மனிதனாக்கி விட்டது. என்னால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பேன். அது மிக மிக மோசமான நிலைக்கு என்னைத் தள்ளியது. ஒரு வருடம் அந்த நோயை எதிர்க்கொண்ட நான், ஒரு கட்டத்தில் வாழ்வின் எல்லைக்கே சென்று விட்டேன். வெளியுலகத் தொடர்பே இல்லாத அப்படி ஒரு வாழ்வை எத்தனை நாள் என்னால் வாழ முடியும் என்று தெரியாமல் மனம் வெதும்பினேன்’’ என்று கலங்கியிருக்கிறார்.

இதனால், என்ன செய்வது என பல விஷயங்களையும் முயற்சி செய்த அவர் யூடியூப், சோசியல் மீடியாக்கள் மூலம் சில ஃப்ரீலான்ஸ் வேலைகளை எடுத்துச் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனால், அந்த வேலைகளில் மனம் முழுவதுமாக லயிக்கவில்லை என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருக்கிறார். அதன்பிறகு கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதில் முழு ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார். அப்படித்தான் தொடங்கியது மேஜிக். தனது உடல் நலனைத் தேற்ற முழு நேரமாகப் பல்வேறு டயட்டுகளைக் கடைபிடித்து வந்த அவர், மறுபுறம் மனதுக்கு நெருக்கமான கோடிங்கையும் தொடர்ந்திருக்கிறார்.

வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில், லண்டனில் உள்ள தனது காதலியின் பெட்ரூமிலேயே அடைந்து கிடைந்திருக்கிறார். அப்படியான சூழலில்தான் ஒருநாள் அவரின் வாழ்வையே மாற்றிப்போட்ட Hopin ஆப்-பின் ஆரம்பகட்ட கோடிங்கை அடித்து முடித்திருக்கிறார். தனது ஆரம்பகால எண்ணங்கள் பற்றி மனம்திறக்கும் அவர், Webinar-ல் உங்களுடன் ஆயிரம் பேர் இணைந்திருக்கலாம். ஆனாலும், இரண்டு தனி நபர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது என்பது ரொம்பவே முக்கியமானது. உங்களுடைய கருத்தை ஒத்த மனிதர்கள் உங்களோடு சேர்ந்து பயணிப்பவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதுதான் அடிப்படை’’ என்றிருக்கிறார். பல்வேறு டயட்டுகளால் உடல்நலன் முன்னேறி, கோடிங் வேலையையே தனது முழுநேர வேலையாக்கிக் கொண்டிருக்கிறார்.வீட்டுக்குள் முடங்கிய நிலை என்பது எனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை வழங்கியது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த எனக்கு உலகையே சுருக்க முடியும் என்ற பிரகாசமான வாய்ப்பையும் ஏற்படுத்தி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட என்னை உந்தித் தள்ளியது’ என்று தனது ஐடியாவின் விதை பற்றி பெருமிதத்தோடு பகிர்கிறார் ஜானி.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உலகையே தலைகீழாக மாற்றிய கொரோனா பெருந்தொற்று காலம்தான் ஜானி வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2018 இறுதியில் தனது Hopin ஆப்-ஐ அறிமுகப்படுத்தி, அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். Zoom ஆப் போன்றே அலுவலக மீட்டிங்குகள், உடன் பணிபுரிபவர்கள் வீடியோ காலில் பேசிக்கொள்ளும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் Hopin ஆப்-இன் அடிப்படை. ஆனால், ஜூம் ஆப்-இல் கலந்துகொள்ளும்போது அதில் பேசுவதற்கு வாய்ப்பளிக்காதவர்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால், Hopin ஆப்-இல் இது சாத்தியம். இந்த முக்கியமான ஒரு அம்சம் ஒரு மீட்டிங்கில் கலந்துகொள்ளும் அனைவராலும் Interact செய்ய முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், நேரடியாக மீட்டிங்கில் கலந்துகொள்ளும் அனுபவத்தைக் கொடுத்தது. அதேபோல, Hopin ஆப் மூலம் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை Remote Work வழியாக வேலையும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. கொரோனா லாக்டவுன் தொடங்கிய காலத்தில் அலுவலக மீட்டிங்குகள் எல்லாமே தாமாகவே ஆன்லைன் ஆப்-களை நோக்கி திரும்பின.

“வாங்கும்போது 224g, வீட்டுக்கு வந்து எடைபோட்டா 165g” : சிங்கப்பூர் FairPrice மீது பெண்மணி புகார் – FairPrice அளித்த விளக்கம்

2019-ம் ஆண்டு 6 ஊழியர்களோடு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், வாய்ப்பு வந்தபோது அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. தொடக்க காலங்களில் நூற்றுக்கணக்கில் இருந்த Hopin ஆப் பயனாளர்களின் எண்ணிக்கை கொரோனா லாக்டவுனின் போது லட்சங்களாக மாறியது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HP உள்ளிட்ட பல நிறுவனங்கள் இன்று Hopin நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்தான். 2020-க்குப் பிறகு மட்டுமே ஆன்லைனில் ஐக்கிய நாடுகள் அவை, நாட்டோ, ஸ்லாக் மற்றும் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்கள், அமைப்புகளின் 80,000-த்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஆன்லைனில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது ஜானியின் நிறுவனம். Hopin நிறுவனத்தின் மதிப்பு முதல் ஆண்டில் மட்டுமே 50 லட்சம் வாடிக்கையாளர்களுடன் 400 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்தது. தற்போது 100 மில்லியன் பவுண்டுகள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜானியின் சொத்து மதிப்பு மட்டும் விண்ணைத் தொட்டிருக்கிறது.

`நேரடியாக அலுவலகம் வந்து பணியாற்றுவதன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. அப்படி வரும்போதுதான் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொண்டு பணியாற்ற முடியும். ஆனால், Remote Work என்பது ஒரு சக்ஸஸ்ஃபுல்லான வொர்க் மோட் என்பது நிரூபிக்கப்பட்டது’ என்று தனது கான்செப்டை விட்டுக் கொடுக்காமல் கூலாகப் பேசுகிறார் ஜானி.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts