TamilSaaga

‘காவல் என் காதல்’ – ஒரு சாமானியன் சாதித்த கதை : இது சைலேந்திர பாபுவின் கதை

தனது வாழ்வில் பெற்ற அனுபவங்களை கற்றல்களை இளைய சமுதாயத்துக்கு சமூகவலைதளம் எனும் வகுப்பறையில் ஊக்குவிப்பு பாடமாய் கொடுத்து வரும் பல லட்ச இளைஞர்களின் நம்பிக்கை பெற்ற மனிதர் தமிழகத்தின் புதிய காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு.

தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறை கிராமத்திலிருந்து வந்தவர். அரசுப் பள்ளியில் படித்து பல்வேறு பட்டங்களை பெற்றவர். எம்.எஸ்.சி (M.Sc), எம்.பி.ஏ (MBA), பி.எச்.டி (Ph.D) – சைபர் குற்ற ஆய்வு படிப்பு முடித்து பட்டங்களை வென்றார்.

துவக்க காலத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தாலும் கல்லூரி பயிலும் போது தேசிய மாணவர் படையில் சேர்ந்து அதில் பணியாற்றியதன் மூலமாக காவல்துறையில் சேரும் ஆர்வம் அவருக்கு அதிகரித்தது.

ஆரம்பத்திலே ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆகிவிடவில்லை. முதலில் வங்கியில் வேலை கிடைத்தது அதன் மீது ஈர்ப்பு இல்லாமல் ஐ.எப்.எஸ் வெளியுறவு துறையில் வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையில் போதுமான அளவு வருமானம் வசதி அனைத்தும் கிடைத்தும் காவல் துறை மீது அவர் கொண்ட காதலால் ஐ.பி.எஸ் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

தனது 25 வயதில் 1987ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி. ஆக பணியாற்றினார். அதில் காஞ்சிபுரம், கடலூர், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு ஆகிய மாவட்டங்கள் அடங்கும். அடையாறு துணை ஆணையாரகவும் தனது பணியை திறம்பட செய்துள்ளார்.

வீரப்பனை பிடிக்கும் தனிப்படையில் ஐ.ஜியாக பணியாற்றி மகுடம் தரித்தவர். சென்னையில் வடக்கு மண்டலத்தின் இணை ஆணையராக கடந்த 2004ல் பணியாற்றிய போது பல்வேறு ரவுடிகளை தனது நடவடிக்கைகளால் ஒடுக்கினார். 4 ஆண்டுகள் தொடர்ந்து வட சென்னை மாவட்ட இணை ஆணையராக பணியாற்றி சிறப்பு பெற்றவர்.

கோவை மாவட்டத்தில் ஆணையராக இருந்தபோது இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மண்டலத்திற்கு ஐ.ஜி ஆக பொறுப்பேற்றார். பின்பு கடலோர பாதுகாப்பு குழு கூடுதல் டி.ஜி.பி, சிறைத்துறை டி.ஜி.பி மற்றும் தீயணைப்புத் துறை டி.ஜி.பி போன்ற பதவிகளை வகித்து பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தன்னலமில்லாமல் இவர் ஆற்றிய அரும்பணி காரணமாக இவருக்கு பிரதமர் பதக்கம், குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதல்வர் பதக்கம் ஆகியவை அளித்து கெளரவிக்கப்பட்டார்.

தற்போது தமிழகத்தின் புதிய டி.ஜி.பிக்கான தேர்வில் இவரது பெயரும் போட்டியில் உள்ளது என வெளியான தகவல்களால் இவரது ஊக்குவிக்கும் நல்ல கருத்துக்களால் ஈர்கப்பட்ட இளைஞர்கள் இணையம் முழுதும் சைலேந்திர பாபு தான் டி.ஜி.பி ஆக வர வேண்டும் என முழங்கினர்.

இன்று அனைவரும் எதிர்பார்த்தபடியே அறிவிப்பு வெளியானது தமிழகத்தின் புதிய காவல்துறை டி.ஜி.பி ஆக சைலேந்திர பாபு IPS அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

சாதிக்க ஆசைப்படு, நீங்களும் ஐ.பி.எஸ் ஆகலாம், உடலினை உறுதிசெய், உங்களுக்கான 24 போர் விதிகள் போன்ற புத்தகங்களை எழுதி இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை எனும் விதையினை விதைத்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று இன்று தமிழகத்தின் டி.ஜி.பி ஆக உயர்ந்துள்ள இவரது வெற்றியும் அதற்கான உழைப்பும் அடுத்த தலைமுறை சாதனையாளர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அள்ளிக்கொடுக்கும்.

Related posts