தேனி: மலேசியாவில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகனை மீட்டு சிகிச்சை அளிக்க உதவக்கோரி அவரது பெற்றோர் கண்ணீருடன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சத்யா நகரைச் சேர்ந்த சேதுராமன் – முனியம்மாள் தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது இளைய மகன் கார்த்திக் (வயது 25) டிப்ளமோ முடித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் நடந்த விபத்து ஒன்றில் கார்த்திக் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய 60 முதல் 70 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட் உள்ளவர்கள் உடனடியாக மலேசியா வருமாறும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் எண் எச்சரிக்கை: வங்கி மற்றும் யுபிஐ பயனர்களுக்கு முக்கிய தகவல்!
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கூலித்தொழிலாளிகளான சேதுராமன் மற்றும் முனியம்மாள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டியைத் தவிர வேறு எங்கும் சென்றிராத அவர்கள், தங்கள் மகனை காப்பாற்றி தாயகம் அழைத்து வர உதவி செய்யுமாறு தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
“எங்களுக்கு வெளி உலகமும் தெரியாது, படிப்பறிவும் இல்லை. எங்களது மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அவனை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, உயிருக்கு போராடும் மகனை நினைத்து வீட்டில் சோகத்துடன் அமர்ந்துள்ளனர்.