நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் நமது சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாத சண்முகம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நேற்று (அக்.6) காலை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அமைச்சர் சண்முகம், அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகப்பட்டினம் சென்றார். அந்த ஹெலிகாப்டர் நாகை ஆயுதப்படை மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.
அங்கு நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் ஆகியோர் அமைச்சர் சண்முகத்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்ட அமைச்சர், சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் அனைத்து சந்நிதிகளையும் வழிபட்ட பிறகு, அருள்மிகு சிங்காரவேலவர் சந்நிதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பயபக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோயில் வரலாறு:
இந்த கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதேஸ்வர சுவாமி சந்நிதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியும் மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சந்நிதியும் அமைந்துள்ளது.
சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு கொண்டதாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுகிறது. வேல் வாங்கியவுடன், சிங்காரவேலவரின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும் என்பது ஐதீகம்.
இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது. இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.