TamilSaaga

வெளிநாட்டில் குடும்பத்துக்காக உழைத்து உழைத்து.. ஓடாய் தேய்ந்த பெண்… உடலை உருக்கிய பக்கவாதம் – இந்தியா கொண்டு வர உதவிய தமிழர்கள்!

வெளிநாட்டில் உழைத்து பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட பெண், பெரும் முயற்சிக்குப் பிறகு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா மணப்பத்தூரைச் சேர்ந்தவர் திருமதி. செல்வநாயகி. பஹ்ரைன் நாட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்காக பத்தாண்டுகளுக்கு முன்பு வந்தவர். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக கடின உழைப்பிற்கிடையே தனது உடல் நலத்தைக் காத்துக் கொள்ள தவறிவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தினால் மூளைக்குச் செல்லும் நரம்புகள் அடைபட்டு பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, சுயநினைவில்லாமல் சல்மானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை ஓரளவு பலனளித்ததன் விளைவாக சிறிதளவு முன்னேற்றம் பெற்றார். ஆனாலும் சுயமாக எழுந்து உட்காரவோ, பேசவோ இயலவில்லை. இந்த நிலையில் பஹ்ரைனில் பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்து வரும் அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தாமரைக்கண்ணனை இவரது உறவினர் சங்கர் வேலு என்பவர் தொடர்பு கொண்டு இவரை ஊருக்கு அனுப்புவதற்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் G.K.-ன் அறிவுறுத்துதலின் பேரில் மன்றத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து மருத்துவமனை சென்று இவரது நிலைமையைக் கண்காணித்து வந்தனர். இவரது பயணத்திற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க – வியர்க்கும் முருகன் சிலை… விமானம், ஹெலிகாப்டர், கார் என்று மெனக்கெடுத்து தமிழகம் வந்த சிங்கப்பூர் அமைச்சர்.. அவ்வளவு “பவர்ஃபுல்” தெய்வமா!

செல்வநாயகியை தாயகம் அழைத்துச் செல்ல வேண்டுமானால் விமானத்தில் படுக்கை வசதியோடு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், இதற்கான விமான பயணச் செலவு மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் அன்னை தமிழ் மன்றம் இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முயற்சித்தது.

இந்தியத் தூதரகத்தின் உதவியோடும் பஹ்ரைனில் வெளிவரும் ‘டெய்லி ட்ரிப்யூன்’ என்ற பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டும், இன்னும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. அயராத முயற்சியின் பலனாகவும் பல நல்லுள்ளங்களின் கருணையாலும், செல்வநாயகி (அக்.6) வியாழக்கிழமை அன்று இரவு பஹ்ரைனில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

சமூக நலத்துறை செயலாளர் பழனிசாமி நேரடியாக சென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து அங்கிருந்து ஆம்புலனஸ் மூலம் அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இவரது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிறிதும் பெரிதுமாக பலர் உதவிகள் செய்துள்ளனர். குறிப்பாக சல்மானியா மருத்துவமனை நிர்வாகத்திற்கும், தமிழகத்தில் இலவசமாக அவசர ஊர்தி அளித்து உதவிபுரிந்த தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்திற்கும் , தமிழக அரசிற்கும் மற்றும் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றம் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts