சென்னை தேனாம்பேட்டை அருகே நடிகர் சிலம்பரசன் பெயரில் பதிவு செய்யப்பட்ட இன்னோவா கார் ஒன்று, அவ்வழியாக நடக்க முடியாமல் சாலையில் தவழ்ந்து வந்த 70 வயது முதியவர் மீது மோதியது. அண்மையில் இந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 18ம் தேதி நடந்த இந்த விபத்தில் காரில் சிம்பு இல்லை என்றபோது அவரது தந்தை T. ராஜேந்தர் தனது பேரனுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மார்ச் 18ம் தேதி இரவு 8.30 மணியளவில் அந்த முதியவர் இளங்கோ சாலை – போயஸ் சாலை சந்திப்பில் ஊர்ந்து சென்றபோது தான் இந்த விபத்து ஏற்பட்டது. உடனே காரில் இருந்து இறங்கிய ராஜேந்தர் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த அந்த பகுதியை சேர்ந்த அந்த முதியவர் சாக்கடை சுத்தம் செய்யும்போது அவரது காலில் அடிபட்டதால் தான் அவர் ஊர்ந்து சென்றார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த காரின் டிரைவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகின்றது. சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வை தொடர்ந்து இறந்த 70 வயது முதியவர் முன்னுசாமி இறுதியாக தனது ஏரியா இளைஞர்களுடன் நடித்த இன்ஸ்டாகிராம் ரீலிஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கால் முடியாத நிலையிலும் அந்த இளைஞர்களோடு கம்பீரமாக நடந்து வரும் முனுசாமியின் அந்த கடைசி வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.