TamilSaaga

“ஆனந்தம் விளையாடும் வீடு”.. படப்பிடிப்பில் நடந்த விபத்து : நடிகர் சேரனுக்கு தலையில் 8 தையல்

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சேரன் என்று இன்றைய கால தலைமுறை நினைத்தாலும், பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி மற்றும் ஆட்டோகிராப் போன்ற பல திரைப்படங்கள் அவர் பெயரை ஆண்டுகள் கடந்தும் சொல்லும். மதுரையில் பிறந்த சேரன் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு தனது சொந்த முயற்சியில் தனது முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா என்ற படத்தை 1997ம் ஆண்டு வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து பல தரமான குடும்ப கதைகளை கொண்ட திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்த பெருமை சேரனை சேரும். 2004ம் ஆண்டு சேரன் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்து வெளியிட்ட ஆட்டோகிராப் திரைப்படம் இன்றளவும் பலரால் பாராட்டப்படுகிறது என்றால் அது மிகையல்ல. இறுதியாக 2019ம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன் கடந்த 2020ம் ஆண்டு வெளியான ராஜாவுக்கு செக் என்ற படத்தின் ராஜாவாக நடித்து அசத்தினார்.

இந்நிலையில் தற்போது நந்த பெரியசாமி என்ற இயக்குநர் இயக்கி வரும் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் நடித்து வருகின்றார் சேரன். இந்த படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஷிவாத்மிகா நடித்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற படப்பிடிப்பின்போது இயக்குநர் சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு 8 தையல்கள் போடப்பட்டது.

இருப்பினும் தன்னால் படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக சேரன் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சேரனிடம் ட்விட்டர் வாயிலாக பலரும் நலம்விசாரித்த நிலையில் “நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.. பயம் ஒன்றும் இல்லை.. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி.. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும்.. நன்றி அனைவர்க்கும்..” என்று ட்வீட் செய்துள்ளார்.

Related posts