SINGAPORE: ஆஸ்திரேலியாவுக்கான டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்து, தன்னை நிராகரித்த பல நபர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் சிங்கப்பூரின் டிம் டேவிட்.
யார் இந்த டிம் டேவிட்?
ஆஸ்திரேலிய பெற்றோர்களுக்கு சிங்கப்பூரில் பிறந்த மகன் தான் டிம் டேவிட். அதாவது, சிங்கப்பூரின் குடிமகன். இவருக்கு 2 வயது இருக்கும் பொழுதே, பெற்றோர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
சிறுவயது முதலே கிரிக்கெட்டில் பேரார்வம் கொண்டிருந்த டிம் டேவிட், 2019ம் ஆண்டு வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியால் டீ-லிஸ்ட் செய்யப்பட்டார். அதாவது செலக்ஷன் கமிட்டியால் விளையாட பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டார்.
இதையடுத்து, தனது தந்தையின் வழியைப் பின்பற்றி சிங்கப்பூர் அணிக்காக விளையாட முடிவெடுத்தார். அதுதான் அவரது கரியரில் முதல் திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம். அசோசியேட் அணியான சிங்கப்பூர் தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி டி20 ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்பாக அணியோடு இணைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிங்கப்பூருக்காகக் களமிறங்கினார். அந்த சீரிஸில் 14 போட்டிகளில் களமிறங்கிய அவர், 558 ரன்கள் குவித்தார். இதில், அவரின் ஸ்டிரைக் ரேட் 158.52. சிங்கப்பூருக்காக விளையாடத் தொடங்கிய முதல் சில மாதங்களிலேயே தனது சிக்ஸர் ஹிட்டிங் பேட்டிங் ஸ்டைலால் கிரிக்கெட் அரங்கில் கவனம் குவித்தார்.
அதன்பின்னர், ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீக்கில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்காக அறிமுகமானார். முதல் சீசனில் பிக் ஹிட்டராக முத்திரை பதித்த டிம், 2020-21 சீசனில் ஹோபார்ட் ஹரிக்கேன் அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் 163.90 ஸ்டிரைக் ரேட்டோடு 218 ரன்கள் குவித்தார். அதன்பின்னர் வந்த பாகிஸ்தானின் பிஎஸ்எல் லீக் அவரது வாழ்வில் முக்கியமான டர்னிங் பாயிண்ட் கொடுத்தது என்றே சொல்லலாம். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கப்பட்ட இரண்டாவது பாதியில் ஜோ பர்ன்ஸுக்குப் பதிலாக லாகூர் அணியால் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டார். ஆறு போட்டிகள் மட்டுமே விளையாடிய அவர் 180 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 166) குவித்து அசத்தினார். அதன்பிறகு, சிங்கப்பூரின் மைந்தனான டிம் டேவிட் தொட்டதெல்லாம் பொன்னானது.
இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் என உலகின் பல மூலைகளுக்கும் சென்று டி20 லீக்குகளில் கலக்கினார். குறிப்பாக, சிபிஎல் தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய அவர், ஒரு சீசனில் 282 ரன்கள் குவித்து, உலக லீக் அணிகளின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பினார். சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் முல்தான் அணிக்காக விளையாடிய டேவிட், காட்டியது மரண மாஸ் என்றே சொல்லலாம். ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முந்தைய வாரம் வரையில் நடந்த போட்டிகளில் மட்டுமே அவர் 221 ரன்கள் எடுத்திருந்தது ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்தது. இதில், அவரின் ஸ்டிரைக் ரேட் 200-க்கும் மேல். அதேபோல், 18 சிக்ஸர்களோடு அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணியில் இருந்தார் டிம்.
ஐபிஎல் வாய்ப்பு
2021 ஐபிஎல் சீசனில் விளையாடிய டிம் டேவிட், ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் சிங்கப்பூர் வீரர் என்ற சாதனை படைத்தார். அந்த சீசனின் இரண்டாவது பாதியில் விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி அணியில் காயமடைந்த வீரருக்கு மாற்று வீரராக அவர் களமிறங்கினார். ஆனால், அந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதேநேரம், அவரின் திறமை பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக விவாதங்கள் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆனால், 2022 சீசனுக்கு முந்தைய மெகா ஐபிஎல் ஏலத்தின்போது சீனே வேற.
மும்பை இந்தியன்ஸ் அணியால் இந்திய ரூபாய் மதிப்பில் 8.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். மும்பை அணியாமல் இந்த சீசனில் சிறப்பாக விளையாட முடியவில்லை என்றாலும், தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளில் தனது முரட்டு அடியை வெளிப்படுத்தி, எதிரணி பவுலர்களை கலங்க வைத்தார்.
ஏன் டிம் டேவிட் ஸ்பெஷல்?
சிங்கப்பூர் போன்ற அசோசியேட் அணியில் இருந்து உலக அரங்கில் கவனம் பெற்றிருக்கும் டிம் டேவிட், இளம் வீரர்கள் பலருக்கு ஊக்கமளிக்கக் கூடியவர். அவர் ஒன்றும் டிவிலியர்ஸ் மோடில் மோல்ட் செய்யப்பட்டவர் இல்லை. அதேநேரம், பவுலர் தனது லைன் அண்ட் லெந்தை சிறிது மிஸ் செய்தாலும், கிரவுண்டில் எல்லைக் கோடு எவ்வளவு மீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும் அந்த பாலை சூப்பராக பார்சல் செய்யும் திறமை பெற்றவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தான் விளையாடும் அணிக்காக ஒவ்வொரு மேட்சையும் முடித்துக் கொடுக்கும் ஃபினிஷர். டிரெடிஷனலான ஷாட் செலக்ஷனைக் கொண்டிருந்தாலும், இன்றைய தேதிக்கு ஷார்ட் பாலை இவரைப் போல் சிறப்பாக ஹேண்டில் செய்யும் துல்லியமான வீரரைப் பார்ப்பது அரிது என்பது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தொடங்கி வல்லுநர்கள் வரை ஒப்புக்கொண்ட விஷயம். 6 அடி 5 இன்ச் உயரம் கொண்ட டிம் டேவிட், சிக்ஸர் மன்னன் என்றே அழைக்கப்படுகிறார்.
அதன் பலனாக தான், இன்று ஆஸ்திரேலியாவின் சர்வதேச டி20 அணியில் விளையாட டிம் டேவிட்டுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதுவும் தன்னை நிராகரித்த அதே ஆஸ்திரேலிய மண்ணில் இருந்து… சிங்கப்பூர் மைந்தனாக ஆஸ்திரேலிய அணியில் சரவெடியாய் வெடிக்க தமிழ் சாகா வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்!.