சிங்கப்பூரில் நடைபெறும் World one Health congress மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிங்கப்பூரின் General Hospital-ல் உள்ள வசதிகளை நேற்று (நவ.9) பார்வையிட்டார். இங்குள்ள வசதிகள், மருத்துவமனையின் தரம், அளிக்கப்படும் சிகிச்சை குறித்த தகவல்கள் உட்பட அனைத்தையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி, இங்கு அளிக்கப்படும் உயர்தர சிகிச்சை குறித்து அதிகாரிகள் எடுத்து சொன்ன போது, அவர் வியந்து பாராட்டினார்.
உலக அளவில் பொதுசுகாதாரத் துறையின் கட்டமைப்பு வலுவாக இருக்கும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் நாடு சிங்கப்பூர். இப்படி ஒரு நிலையை சிங்கப்பூர் எட்ட பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்னென்ன தெரியுமா?
சிங்கப்பூர் – சுகாதார கட்டமைப்பு
சிங்கப்பூர் குடிமக்களுக்கான சுகாதார வசதிகளை அந்நாட்டின் சுகாதாரத் துறை மேற்கொள்கிறது. சிங்கப்பூர் அரசு மக்களின் சுகாதார வசதிகளுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தி வருகிறது. அரசின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகளால் 2000-ம் ஆண்டில் வலுவான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடுகள் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூர் 6-வது இடம் பிடித்திருந்தது. இதுவே, கடந்த 2014-ம் ஆண்டு ’Bloomberg’, சிங்கப்பூரின் சுகாதார கட்டமைப்பே உலகின் திறன்வாய்ந்த கட்டமைப்பு என்று பட்டியலிட்டது.
இந்தப் பட்டியலில் சுமார் 51 வளர்ந்த நாடுகளை சிங்கப்பூர் பின்னுக்குத் தள்ளியது. 2015-ல் 5.54 பில்லியன் மக்கள் தொகையோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (‘GDP’) 402 பில்லியன் டாலர்களோடு இருந்தது சிங்கப்பூர். பெரும்பாலான உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் தனிநபர் வருமானமும் அதிகம். இதனாலேயே, சிங்கப்பூர் அரசு குடிமக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு 3.2 பில்லியன் டாலர்கள் அளவில் ஒதுக்க முடிந்தது.
2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலக அளவில் சிங்கப்பூர் மக்களே அதிக ஆண்டுகள் உயிர் வாழும் மக்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். சிங்கப்பூர் மக்களின் சராசரி ஆயுட்காலம் 84.8 ஆண்டுகளாகும்.
‘Medisave’, ’Medishield Life’ மற்றும் ’Medifund’ போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் அரசால் வழங்கப்படுகின்றன. இத்தோடு தனியார் மருத்துவத் துறை அளிக்கும் காப்பீட்டு சேவைகளையும் சிங்கப்பூர் மக்கள் எடுத்துக் கொள்ள முடியும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நேரடியான அரசு சேவையாகவும், அரசின் மானியங்கள் மூலமாகவும் நிதியளிக்கப்படுகிறது. இந்த சேவைகள் ‘3M’ என்று அழைக்கப்படுகின்றன. எந்த ஒரு நோய்க்கும் இந்த மூன்று திட்டங்கள் மூலம் காப்பீடு வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
’MediShield Life’
சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த அடிப்படையான காப்பீட்டுத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஒருவரின் ஆயுட்காலம் முழுவதும் மருத்துவமனை செலவுகளை இந்த காப்பீட்டு மூலம் ஈடுகட்ட முடியும். அதிக செலவு பிடிக்கும் சில சிகிச்சைகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையையும் இதன் கீழ் பெறலாம். ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘MediShield’ காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக 2015-ல் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
‘Medisave’
தேசிய அளவிலான காப்பீட்டு சேமிப்புத் திட்டம் இது. சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் அனைவரும் தங்களது ஊதியப் பங்களிப்பு மற்றும் வேலைபார்க்கும் நிறுவனத்தின் பங்களிப்பு (வயதைப் பொறுத்து 8% முதல் 10.5% ஆக இருக்கும்) அடிப்படையில் இது செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்துக்கு வட்டி என்கிற வகையிலும் 4%-5% வழங்கப்படுகிறது. எதிர்பாராத வகையில் ஏற்படும் மிகப்பெரிய மருத்துவ செலவுகளை இதன்மூலம் மேற்கொள்ளலாம். வேலை பார்க்கும் அனைத்து சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த காப்பீட்டு சேமிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
’MediFund’
முழுக்க முழுக்க அரசின் மானியங்களின் கீழ் வரும் திட்டம் இது. சுகாதார செலவுகளை மேற்கொள்ள முடியாத மக்களுக்கு அரசால் வழங்கப்படும் பாதுகாப்புத் திட்டம்.
சிங்கப்பூர் அரசின் பங்கு என்ன?
சிங்கப்பூர் அரசின் சுகாதாரத் துறை, சிங்கப்பூர் மக்கள் அனைவரும் நல்ல உடல்நிலையோடு இருப்பதையும் நோயற்ற வாழ்வு வாழ்வதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேபோல், அனைவருக்கும் மலிவு விலையில் சுகாதார பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது. நாடு முழுமைக்குமான பொது சுகாதாரக் கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதோடு, மொத்தமாக சுகாதாரத் துறையின் கண்காணிப்புப் பணியை மேற்கொள்கிறது.
போட்டி அடிப்படையிலேயே சந்தையைக் கண்காணித்தாலும், எப்போதெல்லாம் சுகாதார சேவைகளுக்கான செலவு அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் சிங்கப்பூர் அரசே நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒழுங்குபடுத்தும். அரசின் இந்த செயல்பாட்டு வடிவமைப்பு சந்தையப் பொறுத்தவரையில் நேர்மையான போட்டியையே ஊக்குவிக்கும். இதில் தவறு நடக்க சிறிதளவு கூட வாய்ப்பில்லை என்பதால், அனைவருக்கும் சுகாதார சேவை முறையாக சென்று சேருகிறது.
அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் துறை என்பதால், மருந்துகள் தொடங்கி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் வரை எல்லாமே எல்லாருக்கும் தரமானதாகக் கிடைக்கும். அதேபோல், உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு என்பது சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். எப்போதுமே அந்த மருந்துகள் குறிப்பிட்ட அளவில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறையாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனாலேயே, உலகின் வளர்ந்த நாடுகளில் இருக்கும் நகரங்களான நியூயார்க், லண்டன், துபாய் போன்ற நகரங்கள் ஒருசில மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், சிங்கப்பூரில் எந்தவொரு மருந்துகளுக்கோ, சிகிச்சைக்கோ என்றுமே குறைவு நேராது. இது சிங்கப்பூர் கட்டமைத்துள்ள உலகின் முன்னணி சுகாதார சேவைக்குக் கிடைத்திருக்கும் மகத்தான பெருமை என்றே சொல்லலாம்.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த 2011 மே மாதத்தில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 46 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்து அவர் சிகிச்சை எடுத்ததனால் தான், எமனை சந்தித்து கைக்குலுக்கிவிட்டு மீண்டும் உயிரோடு இந்தியா சென்று, இப்போது “பீஸ்ட்” இயக்குனர் நெல்சன் ஆக்ஷன் சொல்ல ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல், 2016ல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நாட்கள் தான் நகர்ந்ததே தவிர, வேறு எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அப்போது, திருமதி சசிகலா, ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லலாம் கூறியதாக செய்திகள் வெளியானது. அனைத்து ஊடகங்களிலும், ‘ஜெயலலிதா சிங்கப்பூர் சொல்கிறாரா?’ என்று Flash-கள் எதிரொலித்தன. ஆனால், அதிமுக கட்சி அந்த தகவலை மறுத்துவிட்டது. யார் கண்டா? ஒருவேளை அவர் சிகிச்சைக்கு சிங்கப்பூர் அழைத்து வரப்பட்டிருந்தால், இன்று தமிழகத்தின் தலையெழுத்தே வேறு மாதிரியாக இருந்திருக்கலாம்!