TamilSaaga

“மேலிருந்து மழை வரும்னு பார்த்தா, சைக்கிள் விழுது” : சிங்கப்பூரில் இளைஞர் செய்த காரியம் – கடுப்பான போலீஸ்

சிங்கப்பூரின் சோவா சூ காங் கிரசண்ட் பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் சைக்கிளை வீசி எறிந்த 25 வயது இளைஞன் மீது நாளை திங்கள்கிழமை (நவம்பர் 1) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 23 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில், அந்த குறிப்பிட்ட குடியிருப்புத் தொகுதியில் மேலிருந்து சைக்கிள் ஒன்று கீழே வீசப்பட்டதாகக் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரினை பெற்றதை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிங்கப்பூர் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

“தொடர்ச்சியான விசாரணைகளின் மூலம், ஜூரோங் போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து அவரைக் கைது செய்தனர்” என்று சிங்கப்பூர் காவல் படை (SPF) நேற்று சனிக்கிழமை தங்களுது செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. “முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் தனது குடியிருப்புப் பிரிவின் நடைபாதையில் இருந்து அந்த சைக்கிளை கீழே வீசியதாகக் கூறப்படுகிறது.” ஆனால் அந்த குடியிருப்பின் எந்த மாடியில் இருந்து சைக்கிள் கீழே வீசப்பட்டது என்று செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

SPF வழங்கிய புகைப்படம், குடியிருப்புத் தொகுதியின் தரைத்தளத்தில் ஒரு மஞ்சள் நிற மிதிவண்டி வளைந்த சக்கரங்களுடன் கிடப்பதை காட்டியது. தற்போது அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 2,500 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“மற்றவர்களின் உயிருக்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற செயல்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் SPF தெரிவித்துள்ளது.

Related posts