ஏற்கனவே நமது சிங்கப்பூர் அரசு பல நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வருவதற்கு தனிமைப்படுத்துதல் இல்லாத முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட VTL என்ற சேவையை அளித்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே 15கும் அதிகமான நாடுகளுக்கு VTL சேவை இருந்து வரும் நிலையில் தற்போது சிங்கப்பூர் அதன் தடுப்பூசி பயணப் பாதை (VTL) திட்டத்தை கடந்த நவம்பர் 29 முதல் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த நவம்பர் 15 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : திருச்சி – சிங்கப்பூர் – 5 மணிநேரம் தாமதமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 29 முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடன் VTL களையும், டிசம்பர் 6 முதல் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றுடன் VTL களை அறிமுகப்படுத்த சிங்கப்பூர் ஆவணம் செய்துள்ளது. பெருந்தொற்று பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூரும் இந்தியாவும் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரமாக அங்கீகரிப்பது குறித்து மேலும் விவாதித்து வருவதாகக் கூறினார்.
ஆனால் எல்லைகள் தளர்த்தப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் இந்த நிலையில் பயணிகள் பலருக்கு VTL மற்றும் VTL அல்லாத விமான சேவைகளுக்கு இடையிலான குழப்பங்கள் இன்னும் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் VTL முறையில் அனைத்து ஆவணங்களைத் தயார் செய்து தொற்று சோதனை முடிவுகளையும் முடித்துள்ளனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க அவர்கள் விமானநிலையத்திற்கு உள் நுழையும் பொழுது அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காரணம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தற்போது VTL சேவை இல்லை. மாறாக அவர்கள் Entry Approval பெற்று தான் சிங்கப்பூருக்குள் வரவேண்டும். VTL மற்றும் VTL அல்லாத சேவைகளுக்கு என்று தனித்தனி வழிமுறைகள் உள்ளது. ஆகவே இணையத்தில் பதிவு செய்யும்போது இரு சேவைகளையும் முறையாக சரிபார்த்து அதற்கு ஏற்றாற்போல செயல்படுத்த வேண்டும்.
இதனால் தேவையற்ற பண விரயம், மற்றும் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.