TamilSaaga

தற்கொலையில் தமிழகத்திற்கு 2ம் இடம் : தேர்வு பயமும், காதல் தோல்வியும் அவ்வளவு கொடியதா?

பரிட்சையில் தோல்வியடைந்தால், காதல் கைகூடவில்லை என்றால், தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. நாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

கடந்த சில ஆண்டுகளாகவே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில்தான் தற்கொலை மரணங்கள் அதிகளவில் பதிவாகின்றன. இந்திய அளவில் ஒப்பிடும்போது, இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே கடந்த ஆண்டு 24 சதவிகித தற்கொலை இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் 2016-ல் 31,000 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, கடந்த ஆண்டில் மட்டும் 1,53,000-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தபடியாக, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன.

மத்திய அரசின் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டிருக்கும் `விபத்து மற்றும் தற்கொலை மரணம்’ அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தொழில்முனைவோர்கள் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது.

தற்கொலை எண்ணங்களுக்கு, குடும்ப பிரச்னைகள் முதன்மையான காரணமாக இருப்பதாகவும், போதை மருந்துப் பயன்பாடு, திருமணம், காதல், தவறான உறவுமுறை, கடன் பிரச்னை, வேலையின்மை, தேர்வில் தோல்வி போன்றவையும் முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்த தொழில்முனைவோர் தற்கொலை

2019-ல் 9,052 தொழில்முனைவோர் தற்கொலை செய்த நிலையில், 2020-ல் தற்கொலை எண்ணிக்கை 11,716-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதில் வர்த்தகர்கள் எண்ணிக்கை 4,356 எனவும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 2,906-ஆக இருந்தது எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. மீதம் இருப்பதில் 4,226 பேர் விற்பனையாளர்கள் எனவும், 3,134 பேர் மற்ற துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, கர்நாடகாவில் மட்டும் 1,772 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இது 2019-ம் ஆண்டை விட 103% அதிகம். மகாராஷ்டிராவில் 1,610 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1,447 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இது 2019-ம் ஆண்டை விட 36% அதிகம்.

இந்திய மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ-க்கள் அதிகம் இருக்கிறார்கள். இங்கு மட்டும் 28.38 லட்சம் எம்.எஸ்.எம்.இ இருக்கிறது. இந்த மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 15.40 லட்சம் எம்.எஸ்.எம்.இ-க்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பரவ ஆரம்பித்த கொரோனா நோய் தொற்று இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வாட்டி வதைத்திருப்பதுதான் அதிக அளவில் தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்யக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கினால் இந்தத் துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். அதற்கு முன்பாக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பும் சிறுதொழில்முனைவோர்களை பெரிதும் சிரமத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. இதன் காரணமாகவும் அதிக அளவில் தொழில்முனைவோர்கள் தற்கொலை எண்ணத்துக்கு தள்ளப்படுகிறார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தற்கொலைதமிழகத்துக்கு இரண்டாம் இடம்

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் தற்கொலை செய்துகொண்டு தங்களது உயிரைவிட்டவர்கள் எண்ணிக்கை 16,839 பேர். ஆனால் அதே ஆண்டு நடந்த சாலை விபத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,059 பேர் என்கிறது காவல்துறையின் பதிவேடு. விபத்தால் இறப்போரைவிட, கிட்டத்தட்ட இரு மடங்கு நபர்கள் தங்களது முடிவைத் தாங்களே தேடிக்கொள்ளும் நிலை இங்கு இருக்கிறது.

ஆனால் அது ஒரு கன நேரத்தில் எடுக்கும் முடிவல்ல. அதேசமயம், இன்றைய வாழ்க்கைச் சூழலில் தற்கொலை முடிவுக்கு ஒருவரைக் கொண்டுசெல்ல பல்வேறு காரணிகள் இருக்கின்றன என்பதையும் மருத்துவர்கள் விளக்குகின்றனர். மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள், நெருக்கடிகள் போன்வற்றை ஒருவர் ஆற்றுப்படுத்தினாலே, அந்த எண்ணங்களில் இருந்து வெளியேறிவிட முடியுமென்கின்றனர் மருத்துவர்கள். கடும் மன அழுத்தத்தில் இருப்பவர் அதைப்பற்றி பேசுவதும், அப்படி பேசுபருக்கு நாம் அளிக்கும் சிறு ஆறுதலுமே, வாழ்க்கை மீதான பற்றுதலை ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

குடும்பத்தலைவிகள் தற்கொலை

“2020ஆம் ஆண்டு மட்டும் 22 ஆயிரத்து 374 குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த 2019ஆம் ஆண்டைவிட 4.8 சதவிகிதம் அதிகம். இதே ஆண்டில் மட்டும் 37 ஆயிரத்து 666 தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது 2019ஆம் ஆண்டை விட 15.7 சதவிகிதம் அதிகம். 2019ஆம் ஆண்டைவிட 2020ஆம் ஆண்டில் தற்கொலை நிகழ்வுகள் 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த தற்கொலைகளில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு நிகழ்ந்துள்ளன.

அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மட்டும் மாணவர்கள் தற்கொலை 21.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் 12,500 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இதில் 6,598 பேர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பேரில் 7.4 சதவிகிதத்தினர் மாணவர்கள். 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 1 லட்சத்து 50 ஆயிரம் பேரில் 8.2 சதவிகிதம் பேர் மாணவர்கள். நீட் தேர்வு காரணமாக மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 16 மாணவ, மாணவிகளைத் தமிழகம் இழந்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு பிரதமர் கிஸான் திட்டத்தின் மூலம் எந்தப் பலனும் ஏற்படவில்லை. 2020ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 10 ஆயிரத்து 677 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகமாகும்.

தற்கொலை எண்ணம் எதனால் வருகிறது?

தற்கொலைக்கான காரணங்களில் 25 சதவிகிதம், குடும்பப் பிரச்னைகள்தான் என்கிறது ஓர் ஆய்வு. சொத்துப் பிரச்னை, கடன் பிரச்னை, காதல் பிரச்னை, தம்பதிக்குள் பிரச்னை, ஏதோ ஓர் அசம்பாவிதம் நடந்து, அதனால் மானப் பிரச்னை என்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள்தான் தற்கொலைக்கான காரணங்கள். தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும்கூட பெற்றோரின் திட்டுகளுக்குப் பயந்துதான் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறார், பிரபல மனநல நிபுணர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி.

`யாரும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை, பலரும் உடன் இருந்தும் தனிமையில் இருப்பதுபோல உணர்கிறேன், என்னை யாருக்கும் பிடிக்கவில்லை, எனக்கு யாரையும் பிடிக்கவில்லை, நான் பிறருக்கு பாரமாக இருக்கிறேன், என்னால் இனி இயங்க முடியாது..!’ – தொடர் மன அழுத்தத்தால் உண்டாகும் இதுபோன்ற விரக்தியே, நாளடைவில் தற்கொலை எண்ணமாக உருமாறும். இந்த எண்ணம்… சாமானியர்கள் முதல் வெற்றி, பணம், புகழ் உடையவர்கள் உட்பட எல்லா தரப்பட்ட மனிதர்களுக்கும் வரக்கூடும்.

ஒருவர் எடுக்கும் தவறான முடிவு அவரோடு முடிந்துவிடாது. அவர் குடும்பத்துக்கும் அதே அதிர்ச்சி இருக்கும். அதிலும், தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்து மீண்டு வந்தவர்களுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். ‘எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சே’ என்ற அவமானம், குற்ற உணர்வு ஒரு புறமும், ‘எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுதலை என நினைச்சோம்.

இதிலும் தோத்துப் போயிட்டோமே என்ற மன அழுத்தம் மறுபுறம் இருக்கும் எனும் நளினி, தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்து வந்தால், நல்லவேளை பிழைச்சு வந்ததான், செத்துப் போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்ற ஆதங்கத்தில் சில நேரம் அன்பாகவும், சில நேரம் ”ஏன் இப்படிப் பண்ணனும்?” என்று கோபமாகவும் நேர் மற்றும் எதிர்மறை உணர்வுகள் மாறிமாறி குடும்பத்தாரிடமிருந்து வெளிப்படும் என்கிறார். தற்கொலைக்கு முயன்றவர், குடும்பத்தை வெறுத்துத்தான் அந்த முடிவுக்குச் சென்றார் என்று நினைக்காமல், அவர் மனதிலுள்ள வலி எவ்வளவு ஆழமானது என்று புரிந்துகொள்ள முயற்சியுங்கள் எனும் அவர் தற்கொலைக்கான காரணங்களையும், அறிகுறிகளையும் தெரிவிக்கிறார்.

தற்கொலைக்கான காரணங்கள்
1.காதல் தோல்வி / தேர்வில் தோல்வி
2. இணக்கமான உறவுகளின் ஈடு செய்ய முடியாத இழப்பு
3. தோல்விகளை எதிர்கொள்ள தெரியாமை .
4. மற்றவர்களுடன் நெருங்கி பழகாமல் தனிமையில் இருப்பவர்கள்.
5. அதிகமாக போதைப் பொருள்கள் பயன்படுத்துவர்கள் / குடிப்பழக்கம்
6. .உடல் ஊனத்தின் காரணமாக ஏற்படும் மன வேதனை
7. வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல்
8. அதிகமாக உணர்ச்சி வசப்படுவது
9.மற்றவர்களுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது
10.தாழ்வு மனப்பான்மையின் காரணமாக
11.குற்றவுணர்ச்சியின் விளைவாக
12.பாலியல் பிரச்சனைகள்
13.எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டே இருப்பது
14.பொருளாதார பிரச்னைகளால்
15.மற்றவர்கள் தன்னை அங்கீகரிக்கவிட்டால்
16.கடன் தொல்லையால்
17. தாங்க முடியாத உடல் மற்றும் மன வேதனை
18.குழந்தை வளர்ப்பு முறை
19.கணவன் மனைவியை சந்தேகப்படுவதால்
20.நோய் அல்லது உடல் வலியால்

காதல் தோல்விகளும், தேர்வு தோல்விகளும்  இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது.

தேர்வு முடிவை எதிர்கொள்ளும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அடிப்படையில் நல்ல உறவு வேண்டும். தோழமையான ஓர் உறவை சின்ன வயதிலிருந்தே உருவாக்கி, குழந்தைகள் வளர வளர அந்த உறவை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், ‘எது நடந்தாலும் நம் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம்’ என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கு வரும். எந்தப் பிரச்னை என்றாலும் தயங்காமல் பகிர்ந்துகொள்ள முன்வருவார்கள்.

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு, பள்ளியிலும் வீட்டிலும், படிப்பு சார்ந்த பிரஷர் அதிகம் இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்குள் தேர்வு குறித்த பயமும் அதனால் எழும் மன அழுத்தமும் அதிகமாகிறது. குழந்தைகள் மனதில் மதிப்பெண் குறித்த பாரத்தை ஏற்றிவைப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

நமக்குக் கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
‘படிக்காமலேயே வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் இருக்கிறார்கள்’ என்று பிள்ளைகளிடம் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதையுங்கள். தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், ”பரவாயில்லை திரும்பவும் எழுதி பாஸ் பண்ணிக்கலாம். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை” என்று மன ஆறுதலைக் கொடுங்கள். ‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். ”ஃபெயில் ஆனா என்னப்பா? இதோட வாழ்க்கையே முடிஞ்சுபோகலை. இதுக்கு மேலயும் இருக்கு என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.

இப்படி இணக்கமாக வீட்டுச் சூழ்நிலை இருந்தால், எந்தப் பிள்ளையும் ரிசல்ட் வந்ததும் வீட்டை விட்டு ஓடிப் போக மாட்டார்கள். இதே போல் பிள்ளைகள் காதல் விசயம் தெரிந்தவுடன் வீட்டில் கிளம்பும் எதிர்ப்புகளும், காதல் தோல்விகளையும் இன்றைய இளைஞர்களை அதிகமாக பாதிக்கிறது. பிள்ளைளுக்கான பிரச்சனைகளை அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் தெரிவிக்காத போது, அவர்கள் நண்பர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி விடலாம். அவர்களுக்கு தற்கொலை எண்ணமும் தோன்றாது என்கிறார் மருத்துவர் நளினி

தற்கொலை எண்ணத்துக்கு முந்தைய அறிகுறிகள்?

ஒவ்வொருவரின் நடத்தை குணநலன்களை உற்று கவனிக்க வேண்டும்.அப்போது சாதாரண மனநிலையில் இருப்பவர்களை விடவும் இவர்கள் வேறுபட்டு காணப்படுவார்கள் , உதாரணமாக மனக்கவலை, தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் இவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். இவர்களை கண்டறிந்து முதலில் இவர்களின் முழுத் தகவல்களை பெற வேண்டும்.

இவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளை இவர்களின் பெற்றோர்களிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டறிந்து அதற்கான சரியான தீர்வுகளை வழங்க வேண்டும்.  குடும்பத்தினரிடமிருந்தும் நண்பரிடமிருந்தும் விலகி இருப்பார்கள். எப்போதும் கவலையோடிருப்பார்கள். அதே போல் சுற்றி நடக்கும்  எந்த நிகழ்விலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தூங்காமல் இருப்பார்கள்.

அவர்களின் உடல் எடையிலும் மாற்றம் காணப்படும்.  ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருப்பவர்களை இன்னும் உஷாராக கவனிக்க வேண்டும். உயில் எழுதுதல், இன்சூரன்ஸ் முதலியவைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நினைப்பார்கள். 

தற்கொலை சிந்தனையுடையவர்களுக்கு தனி நபர் ஆலோசனை வழங்க வேண்டும். அடிப்படை குணாதிசியத்தை மாற்றுவதற்கான பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். இதில் பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளை வளர்ப்பவர்கள் அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பதினால் தோல்வியை சந்திக்கவிடாமல் வளர்க்கின்றனர், தேர்வில்,தொழில்,காதல் என தோல்வி வரும் போது அதை எதிர்த்து சமாளிக்க முடியாமல் தற்கொலை சிந்தனைக்கு தள்ளபடுகிறார்கள்.

தற்கொலையை தடுக்கும் வழிகள் :
1. மனநல மருத்துவரை ஆலோசித்து மருந்துகள் மூலம் தற்கொலை எண்ணங்களை கட்டுப்படுத்தலாம்.
2.குழந்தையிலிருந்தே தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம்.
3.அடிப்படை குணாதிசியத்தை மாற்றுதல்
4.மன தைரியத்தை அதிகப்படுத்துதல்
5.தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் இருத்தல்
6.அவர்களிடம் இருக்கும் வேறு சிறப்புகளை கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்துதல்
7.பள்ளி, கல்லூரி, மற்றும் பணிமனைகளில் கவுன்சிலிங்  குழுவை ஏற்படுத்த வேண்டும் இக்குழுவின் நோக்கமானது தற்கொலை சிந்தனையுடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வராமல் தடுப்பதே  கவுன்சிலிங் குழுவின் நோக்கம்.

“தற்கொலை செய்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், ஒரு காரணம் மட்டுமே அவரின் அந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்காது. அதற்குப் பலவிதமான காரணங்களும் அழுத்தங்களும் இருக்கும். ஆனால், கூர்மையான கண்ணோட்டத்துடன் அந்த முடிவுக்கான பதில்களை நாம் தேடுவதேயில்லை. முடிவிலியாக நீண்டுகொண்டே செல்லும் தற்கொலை நிகழ்வுகளுக்கு, இந்தப் போக்கும்கூட காரணமாக அமைகிறது” என்று வருத்தத்துடன் கூறுகிறார், மனநல மருத்துவரும், சென்னையிலுள்ள சிநேகா அமைப்பின் (தற்கொலை தடுப்புக்கான உதவி மையம்) நிறுவனரும், உலக சுகாதார நிறுவனத்தின் தற்கொலைத் தடுப்புப் பிரிவு ஆலோசகருமான லட்சுமி விஜயகுமார்.


தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

மன வருத்தங்களுக்குத் தீர்வாக நம்மில் சிலர் எடுக்கத் துணியும் தவறான முடிவுகள், நம்மைச் சார்ந்தோருக்கு என்றென்றும் அகலாத வேதனையை மடைமாற்றிச் செல்லவே வழிவகுக்கும். எனவே, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடைத்துப் பேசுவோம், தீர்வைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கட்டமைப்போம் என்கிறார் சிநேகா தற்கொலைத் தடுப்பு மையத்தை சேர்ந்த பாலாஜி.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :

தற்கொலைத் தடுப்பு மையம் – 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் – 1091

Related posts