சிங்கப்பூரில் இன்று கமலா ஹாரிஸ் மற்றும் நமது பிரதமர் லீ ஆகியோர் சந்தித்து உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் காலநிலை நடவடிக்கை, சுற்றுச்சூழல் நிர்வாகம், நிலையான வளர்ச்சி மற்றும் குறைந்த கார்பன் பயன்பாடு ஆகியவற்றில் சிறந்த ஒத்துழைப்புக்கான கூட்டாண்மைக்கு அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க-சிங்கப்பூர் காலநிலை கூட்டாண்மை பசுமை வளர்ச்சி துறைகளில் “வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எரிசக்தி மாற்றங்கள், சுத்தமான ஆற்றல் உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலையான போக்குவரத்து, நிலையான நிதி மற்றும் தரமான கார்பன் வரவு சந்தைகள் உள்ளிட்ட பசுமை வளர்ச்சித் துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று தெரிவித்தது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சிங்கப்பூரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றம் என்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த கமலா ஹாரிஸ் விரும்பும் ஒரு பகுதி என்று அமெரிக்க மூத்த நிர்வாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் -19 தொற்றுநோய், சைபர் பாதுகாப்பு, மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்றவற்றுக்கான முன்னெடுப்பு இந்த பேச்சுவார்த்தையில் அடங்கும்.
கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் நகரங்கள் மிகவும் நிலையானதாக இருக்க உதவுவது குறித்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா அடுத்த ஆண்டு இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.