TamilSaaga

தனது பிறந்தநாளில் இறந்த சிங்கப்பூர் டெலிவரி டிரைவர்… குடும்பத்துடன் ஆசை ஆசையாய் பிறந்தநாள் கொண்டாடச் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சிங்கப்பூரில் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி டிரைவர் ஒருவர் தனது பிறந்தநாள் அன்று இறந்த துயர சம்பவம் நடந்திருக்கின்றது. சிங்கப்பூரில் டெலிவரி டிரைவராக பணி செய்யும் லீ பூன் தியாம் என்பவர் தனது 46வது பிறந்தநாள் விழாவை கொண்டாட ஆசை ஆசையாக பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது உட்லே மால் கடைத்தெருவுக்கு அருகே கார் ஒன்றுடன் இவரது பைக் மோதியது.

சம்பவம் நடந்த உடனேயே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் சுயநினைவை இழந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை சோதித்த டாக்டர்கள் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்ததன் காரணமாக உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறும் பொழுது, லீயுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, விருந்துடன் அவரது குடும்பத்தினர் காத்திருந்ததாக இறந்தவரின் மூத்த மகன் தெரிவித்தார். வழக்கமாக ஆறு மணிக்குள் வீடு திரும்பும் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் அழைப்பினை ஏற்கவில்லை. சிறிது நேரம் கழித்து அவர் இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Related posts