போதைப்பொருள் குற்றங்களுக்கான மரணதண்டனைக்கு சிங்கப்பூர் அரசு உடனடித் தடையை அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்காக 64 வயது நபர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டதையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த ஆண்டு சிங்கப்பூரில் தூக்கிலடப்பட்ட ஐந்தாவது நபர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது, மலாய் சிங்கப்பூரரான நசெரி பின் லாஜிம், 33 கிராமுக்கும் அதிகமான டயமார்பைன் கடத்தியதற்காக கடந்த ஏப்ரல் 2012ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் “சர்வதேச சட்டத்தின் கீழ், இதுவரை மரண தண்டனையை ரத்து செய்யாத நாடுகள், வேண்டுமென்றே கொலை செய்வது உள்ளிட்ட ‘மிகக் கடுமையான குற்றங்களுக்கு’ மட்டுமே மரணதண்டனையை விதிக்கலாம்” என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் “போதைப்பொருள் குற்றங்கள் இந்த வரம்பிற்குள் வருவதில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட மரணதண்டனை அறிவிப்புகள் கடுமையாக உயர்ந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்நிலையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மேலும் மரணதண்டனை விதிக்கப்படுவதை நிறுத்தி, அதற்குப் பதிலாக அவர்களின் தண்டனைகளை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, சிறைத்தண்டனையாக மாற்றுமாறு நிபுணர்கள் சிங்கப்பூரை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் மரண தண்டனையை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், அனைத்து மரணதண்டனைகளுக்கும் உடனடியாக தடை விதிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மரணதண்டனையின் நோக்கத்தை, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக உள்ள விஷயங்களை மறுஆய்வு செய்யுமாறும் சிங்கப்பூர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த தகவல் UN எனப்படும் ஐ.நாவின் அதிகாரப்பூர்வ செய்தித் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டடுள்ளது.