மலேசியாவில் இருந்து வந்த லாரியில் styrofoam பெட்டியில் சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட இரண்டு உயிருள்ள மலைப்பாம்புகள், துவாஸ் சோதனைச் சாவடியில் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து நேற்று (ஏப்ரல்.9) ICA மற்றும் NParks சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “ஐசிஏ அதிகாரிகள், சிமென்ட் ஏற்றிச் சென்ற மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரியின் கேபினில் ஒரு styrofoam பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மலைப்பாம்புகள் கண்டறியப்பட்டது” என்று தெரிவித்தனர்.
லாரியை ஓட்டி வந்த மலேசிய ஓட்டுநர், ஆரம்பத்தில் பல துளைகள் கொண்ட அந்த பெட்டியில் உணவுகள் இருப்பதாகக் கூறினார். பிறகு, அதில் முக்கியமான பொருட்கள் இருப்பதாக மாற்றிக் கூறினார். ஆனால் தொடர்ந்து அவரை முறையாக விசாரித்ததில் அதில் உயிருள்ள பாம்புகள் இருந்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அந்த டிரைவரை NParks அதிகாரிகள் சிறப்பாக கவனித்தனர். அந்த இரு மலைப்பாம்புகளும் 4.8 மீ மற்றும் 3.8 மீ நீளம் கொண்டிருந்தன. அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாம்புகள் இவை.
ஒரு பாதுகாக்கப்பட்ட இனத்தை அனுமதியின்றி இறக்குமதி செய்வது அழிந்து வரும் உயிரினங்கள் (இறக்குமதி மற்றும் ஏற்றுமதி) சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது $50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இதுபோன்று சந்தேகத்திற்கிடமான சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால் 1800-476-1600 என்ற எண்ணில் NParks க்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். பகிரப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.