TamilSaaga

“சிங்கப்பூரில் டிக் டாக் மோகத்தால் ஏற்பட்ட பிரச்சனை” : இரண்டு சிறுவர்களிடம் போலீசார் விசாரணை

சிங்கப்பூரில் டிக்டோக் செயலியில் விடுக்கப்படும் சவாலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் செயல்களில், அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தியதாக கருதப்படும் இரண்டு வாலிபர்கள் தற்போது விசாரணையில் உள்ளனர் என்று போலீஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

“Devious Licks” சவால் என்ற அந்த சவாலில் அமெரிக்காவில் உள்ள பங்கேற்பாளர்கள், தாங்கள் இதுகுறித்து பகிரும் வீடியோவில் அவர்கள் பள்ளிகளில் இருந்து திருடிய விஷயங்களைப் பற்றி தற்பெருமை பேசுவார்கள். சிங்கப்பூரில் பதிவாகியுள்ள இந்த இரண்டு வழக்குகளும் அரசாங்க அடையாளங்களை அகற்றுவதை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 19ம் தேதி மாலை 5.16 மணியளவில், கக்கி புக்கிட் MRT நிலையத்தின் அடையாளத்தை வைத்திருக்கும் ஒரு இளைஞனின் படம் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்டதை குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த இளைஞனின் கையில் இருந்த அந்த அடையாளம் முதலில் MRT ஸ்டேஷனுக்கு செல்லும் நடைபாதையின் முகப்பில் இருந்தது. மேலும் அதே நாளில், இரவு 9.40 மணியளவில், தேசிய சுற்றுச்சூழல் முகமைக்கு (NEA) சொந்தமான அடையாளத்தை இளைஞர் ஒருவர் கையில் வைத்திருக்கும் வீடியோவைப் பற்றிய மற்றொரு புகாரை காவல்துறை பெற்றது. இந்த அடையாளம் முதலில் ஹூகாங்கில் உள்ள ஜலான் சாங்க்கெட்டில் தரையில் இணைக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளுக்குப் பிறகு, கக்கி புக்கிட் எம்ஆர்டி வழக்கு 15 வயது சிறுவனுடனும், NEA வழக்கு 14 வயது சிறுவனுடனும் இணைக்கப்பட்டது தெரியவந்தது. குற்றச் செயல்களைச் சித்தரிக்கும் உள்ளடக்கத்தை தடுப்பதற்கான கொள்கையின் ஒரு பகுதியாக டிக்டாக், அந்த வீடியோக்களை நீக்கியுள்ளது. அனுமதியின்றி அரசு சொத்துக்களை அகற்றுவது சம்பந்தப்பட்ட செயல்கள் “நாசகாரமாக” கருதப்படும் என்பதை காவல்துறை நினைவூட்டுகிறது.

இந்த குற்றத்தில் ஈடுபடும் ஒரு குற்றவாளிக்கு 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்று முதல் எட்டு பிரம்படிகள் வழங்கப்படும் .

Related posts