சிங்கப்பூரில் இருக்கும் கட்டுப்பாடான சட்டத்திட்டங்கள் தான் இந்நாட்டை கண்டு மற்ற உலக நாடுகள் வியக்கும் வகையில் வைத்துள்ளது. எனினும், அதனை நேரில் சென்று பரிசோதிக்க பார்க்க நினைத்த இளைஞர், வைத்த சோதனை சிங்கப்பூரின் தரம் என்ன என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
ஆம்! Uptin Saiidi என்ற டிக்டாக் யூஸர் ஒருவர், மற்றவர்கள் சொல்வது போல் சிங்கப்பூர் எந்தளவுக்கு பாதுகாப்பான நாடு என்பதை அறிய திட்டமிட்டார். அதன்படி, தனது காஸ்ட்லியான லேப்டாப்பை, சிங்கப்பூரில் உள்ள பிரபல உணவகமான ஸ்டார்பக்ஸில் பலரது பார்வை படும்படி ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது, அவர் விட்டுச் சென்ற லேப்டாப் அதே இடத்தில் அப்படியே பத்திரமாக இருந்ததை எண்ணி வியந்து போனார். இதனை அப்படியே ஒரு வீடியோவாக பதிவு செய்து அதனை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், 2021-ல் சிங்கப்பூர் அரசு வெளியிட்ட சில புள்ளி விவரங்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில், “சிங்கப்பூரில் கடந்த 250 நாளில் பொது குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. என்னுடைய லேப்டாப் நான் வைத்த இடத்திலேயே இருந்ததே, இந்த புள்ளி விவரத்துக்கு சாட்சி” என்று கூறியுள்ளார்.
சிங்கையில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம், இங்கு உள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. இதனால் அவர்கள் மற்றவர்களின் உடமைகளை அபகரிக்கும் எண்ணம் ஏற்படுவதில்லை. மேலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனையும் தோன்றுவதில்லை.
இதுதவிர, சிங்கப்பூர் முழுவதும் ஆங்காங்கே கேமராக்கள் உள்ளன. இவை, குற்றங்கள் நடப்பதை தடுக்க பெரும் பங்காற்றுகின்றன. யார் தவறு செய்தாலும், கேமரா கண்களில் இருந்து தப்பிக்க முடியாது. அதையும் மீறி ஒருவர் குற்றங்களில் ஈடுபட்டால், அவருக்கு கடுமையான தண்டனை மிக விரைவாக வழங்கப்படுகிறது.
Uptin-ன் இந்த வீடியோ சமூக தளங்களில் வைரலான நிலையில், பயனர் ஒருவர் அவருக்கு நடந்த அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், “நான் சிங்கப்பூரில் வசித்த போது, என்னுடைய மொபைலை பேருந்து நிலையத்தில் தவற விட்டேன். மறுநாள் அங்கு சென்று பார்த்த போது எனது மொபைல் வைக்கப்பட்டு, அதில் ‘தொலைந்து போன Phone” என்று எழுதியிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.