TamilSaaga

ரொமான்ஸ்… செக்ஸ்.. ஞாயிறு அதுவுமா காலையிலயே இப்படியா..! சிங்கப்பூரில் விநோத இணைதலில் ஈடுபடும் 4 உயிரினங்கள்!

இயற்கையின் படைப்பில் எத்தனையோ விசித்திரங்களை நாம் பார்த்திருக்கலாம். துணையைத் தேடி இனப்பெருக்கம் செய்வதில் எந்தவொரு உயிரினமும் விதிவிலக்கானதில்லை. ஆனால், துணையை எந்த அடிப்படையில் முடிவு செய்கின்றன என்பதில் இருக்கிறது சூட்சுமம். சிங்கப்பூரில் அப்படி வித்தியாசமான இனப்பெருக்க முறைகளைக் கொண்டிருக்கும் நான்கு உயிரினங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

ஆப்பிரிக்க நத்தைகள்

நத்தைகளைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் பல நத்தைகள் இணைந்து ரொமான்ஸில் ஈடுபடுவதை நீங்கள் பார்க்க முடியும் அல்லது இனப்பெருக்க நேரத்தில் எந்தவொரு ஈடுபாடு காட்டாமால் குறிப்பிட்ட இணைக்கு உதவும் சில நத்தைகளும் உள்ளன. பெரோமோன் என்ற வேதிப் பொருள் சுரப்பே நத்தைகளிடையே இப்படியான ஈர்ப்புக்குக் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். சேறு நிறைந்த பகுதிகளிலோ அல்லது காற்றிலே கூட இந்த வேதிப்பொருளை வெளியிட்டு நத்தைகள், தனக்கான துணையைத் தேடும் நேரம் வந்ததை வெளிப்படுத்துமாம். பெரோமோன் வேதிப்பொருளால் ஈர்க்கப்படும் மற்ற நத்தைகள் கிடைக்கும் வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறார்கள்.

பெரிய ஆப்பிரிக்க நத்தைகள் ஆண் பால், பெண்பால் குணங்களைக் கொண்ட hermaphrodite உயிரினங்களாகும். அதேநேரம், நத்தையினங்கள் எல்லாமும் இந்த இருபாலின குணங்களைக் கொண்டவை அல்ல. பெரோமோனால் ஈர்க்கப்பட்டு துணையை நோக்கிச் செல்லும் சில நத்தைகளின் கழுத்துக்குக் கீழே வெள்ளை நிறத்தில் ஆண்குறி போன்ற நீளமான பொருள் இருப்பதைப் பார்க்க முடியும். சரியான துணையைக் கண்டுபிடித்துவிட்டால், அதனிடமிருந்து சாதகமான பதில் வந்தவுடன் பின்புறமாகச் சென்று தனது ஓட்டை அந்த நத்தையின் மீது பொருத்துமாம். கீழே இருக்கும் நத்தையும் மேலே இருக்கும் நத்தையோட்டோடு தன்னை இணைத்துக் கொண்டு கழுத்துப் பகுதியை ஒன்றோடு ஒன்று இணைத்து, ஒரே நேரத்தில் இரண்டு நத்தைகளும் ஒரே நேரத்தில் தங்களது ஆண் குறிகளை மற்றொன்றோடு இணைத்துக் கொள்ளுமாம். இனப்பெருக்க சேர்க்கை இப்படியே ஆறு மணி நேரத்துக்குத் தொடரும் என்கிறார்கள் விலங்கியலாளர்கள்.

சாண வண்டுகளின் வெறித்தனமான சண்டை

மண் பொறியாளர்கள் என்றழைக்கப்படும் சாண வண்டுகள் (Dung Beetles), மண்ணின் தன்மையைப் பாதுகாப்பதில் முக்கியமான பங்காற்றுபவை. விலங்குகளின் கழிவுகளை மண்ணில் புதைப்பதன் மூலம் ஊட்டச்சத்துகள் மறுசுழற்சி செய்ய இவை உதவுகின்றன. விலங்குகளின் கழிவுகளில் இருக்கும் செரிக்கப்படாத விதைகளை கழிவுகளோடு சேர்த்து இவை மண்ணில் புதைக்கின்றன. கழிவகற்றி வண்டுகளான இவைகளால், அதிகப்படியான ஒட்டுண்ணி ஈக்கள் பெருக்கம் குறைக்கப்படுகிறது. உலகில் மொத்தமிருக்கும் சாண வண்டுகளில் 30% Onthophagus குடும்பத்தைச் சேர்ந்தவை. மண்ணுக்கு அடியில் குழிதோண்டி தங்கள் வாழிடங்களை வடிவமைத்துக் கொள்ளும் இத்தகைய சாண வண்டுகள் அமைக்கும் சுரங்கப்பாதைகள் சிக்கலான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். அந்த சுரங்க பாதைகள் வழியாக தங்கள் வசிக்கும் வசிப்பிடத்துக்குக் கழிவுகளை உருண்டை வடிவில் இவை உருட்டிச் செல்லும்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை 25 வகையான சாண வண்டுகளின் வசிப்பிடமாக இருக்கிறது. இவற்றில் 23 வகையான வண்டுகள் சுரங்கப்பாதை தோண்டும் Onthophagus குடும்பத்தைச் சேர்ந்தவை. துணை தேடும் ஆண் வண்டுகள், இதுபோன்ற சுரங்கப்பாதையின் வாயிலில் காத்திருக்குமாம். பொதுவாக அதுபோன்ற சுரங்கப்பாதைகள் பெண் வண்டுகளால் தோண்டுப்படுமாம். சில நேரங்களில் தங்களுக்குப் பிரியமான பெண் துணைக்காக பெரிய ஆண் வண்டுகள் மூர்க்கமாக மோதிக்கொள்ளுமாம். இரண்டு கொம்புகளைப் பயன்படுத்தி தங்களின் உரிமையை நிலைநாட்ட அவை கடுமையான மோதலில் ஈடுபடும். இந்த சண்டையில் வெற்றிபெறும் வண்டே, தனக்கு விருப்பான இணையோடு சேர்கிறது. பெண் வண்டுகள் இடும் முட்டைகள், கழிவுகளாலான பந்துகளில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது.

சண்டையில் வெற்றிபெற்ற ஆண் வண்டு, பெண் வண்டோடு அந்த முட்டைகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கிறது. மற்ற வண்டுகளோடு சண்டையிட்டு தனது துணையை அவை பாதுகாக்கின்றன. சுரங்கப்பாதையின் வாயிலில் இதுபோன்ற சண்டைகள் ஓயாமல் நடந்துகொண்டிருக்குமாம். இனப்பெருக்கத் துணையைத் தேர்ந்தெடுக்கவும், தொடர்ச்சியாக அதன் பாதுகாப்புக்காகவும் நடக்கும் இந்த முறையை Sexual Selection நடைமுறை என்கிறார்கள். சாண வண்டுகள் எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கின்றன, அதன் கொம்புகளின் நீளம் போன்றவை சண்டைகளில் சம்பவம் செய்ய முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

அதேநேரம், கொம்புகளும் உடலமைப்பும் சிறியதாக இருக்கும் மற்ற சாண வண்டுகள் பெண் துணையோடு இணைய தந்திரமான மற்றொரு முறையைக் கையாளுகின்றன. `the sneaky male tactic’ என்று வரையறுக்கப்படும் இந்த முறையில், அளவில் சிறிதான ஆண் வண்டுகள், சுரங்கப்பாதையின் வாயிலைக் காவல் காக்கும் பெரிய வண்டுகளை ஏமாற்றி தந்திரமாகப் பெண் வண்டுகளோடு இணைகின்றன. பெரிய வண்டுகளைப் போல் உடலளவிலும் கொம்புகள் அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த வகை சிறிய வண்டுகளிடம் இனப்பெருக்கத் திறன் மிதமிஞ்சிய அளவில் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாண வண்டுகள் இனப்பெருக்கத்தில் இது முக்கியமானது. வெவ்வேறு வகையான சாண வண்டுகள், பல்வேறு வகையான இனப்பெருக்க முறைகளைப் பின்பற்றுகின்றன.

கருப்பு ஈ (Black Scavanger Fly)

இனப்பெருக்கத்துக்காகவே பல்வேறு முறைகளைப் பின்பற்றுபவை இந்த கருப்பு ஸ்கேவேஞ்சர் ஈக்கள். பொதுவாக, ஆண் ஈக்கள், பெண் ஈக்களின் மேல் ஏறி, அதன் மூலம் இணைகின்றன. இதற்காகவே, பெண் ஈக்களின் இறக்கைகளை வலுவாகப் பற்றிக்கொள்ளும் வகையில் Sepsid fly எனப்படும் ஆண் ஈக்களுக்கு முன்கைகள் எனப்படும் forelimbs-கள் இருக்குமாம். இந்த முன்கைகளைப் பயன்படுத்தி பெண் ஈக்களின் மீது அமர்ந்துகொண்டு இணைதலில் ஈடுபடுகின்றன. இவைகளைப் பயன்படுத்தியே பெண் ஈக்களை ஈர்க்கின்றன.

இந்த கைகளைப் பயன்படுத்தி பெண் ஈக்களை ஈர்க்க பல்வேறு சாகசங்களிலும் அவை ஈடுபடுமாம். உதாரணமாக, தன்னுடைய கைகளைப் பயன்படுத்தி பெண் ஈக்களின் முதுகில் ஒருவிதமான வாசனைத் திரவியத்தைப் பூசுமாம். இது, தன்னுடைய இணை என்பதை மற்ற ஆண் ஈக்களுக்கு உணர்த்தும் அடையாளமாகவும் பயன்படும். இனப்பெருக்க நேரத்தில் ஆண் ஈக்கள் வெளிப்படுத்தும் ஸ்பெர்ம் எனப்படும் திரவத்தைச் சேமிக்க பெண் ஈக்கள் உடலில் பல்வேறு அமைப்புகள் இருப்பதால், பல ஆண் ஈக்களுடன் இணைய முடியும். குறிப்பிட்ட ஆண் ஈயோடு இணைந்ததை பெண் ஈ விரும்பவில்லை என்றால், அது வெளிப்படுத்தும் இனப்பெருக்க திரவத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியும். எந்த ஈயுடைய இனப்பெருக்க திரவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை பெண் ஈ-யால் முடிவு செய்ய முடியும். இதனால், பெண் ஈ-யைக் கவர ஆண் ஈக்கள் பகீரதமான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

சுத்தியல் தலை பூச்சி (hammerhead flies)

சுத்தியல் தலை பூச்சிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை என்றாலும், அவை எப்படி இனப்பெருக்க செய்கின்றன என்பது பற்றிய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. அழுகும் மரக்கட்டைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை ரசாயனப் பொருள்தான் ஆண் – பெண் சுத்தியல் தலைபூச்சிகளின் இணைதலுக்கு உதவி செய்பவை. மரக்கட்டைகள் அழுகும் நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் அவற்றில் இருந்து வெளியாகும் லார்வா போன்ற பொருளில் இருந்து வரும் வாசமே அது. அந்த வாசனையை நுகரும் சுத்தியல் தலை பூச்சிகள் அந்த மரக்கட்டைகளை இணைதலுக்கான இடமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

குறிப்பிட்ட மரக்கட்டைகளைக் கண்டுபிடிக்கும் ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகள் வருகைக்காக அங்கே காத்திருக்கத் தொடங்குகின்றன. மற்ற ஆண் பூச்சிகள் அங்கே வந்துவிடாமல் இருக்கக் காவல் பணியையும் அவை செய்கின்றன. இணைதல் முடிந்தவுடன் அந்த இடத்திலேயே பெண் பூச்சிகள் முட்டைகளை இடுகின்றன. இந்த நடைமுறை lekking என்றழைக்கப்படுகிறது. ஆதிக்கம் செலுத்தும் ஆண் பூச்சி, ஒரே நேரத்தில் பல பெண் பூச்சிகளோடு இணைகிறது. தலைப்பகுதியில் இருக்கும் சுத்தியல் போன்ற அமைப்பு எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவை ஆதிக்கம் செலுத்தும் என்பது ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு. மற்ற ஆண் பூச்சிகளோடு தங்களின் சுத்தியல் அமைப்பை ஒப்பிட்டு அதன் நீளத்தை வைத்து வெற்றிபெறும் பூச்சி எது என முடிவு செய்யப்படுமாம். அதேநேரம், பெண் ஈக்கள் வட்டவடிவமான தலையைக் கொண்டிருக்கும்.

Related posts